நெய்ச் சோறு,கறிச் சாப்பாடு -மவ்லித் மாதம்

Thursday, January 17, 2013



இது மவ்லிது மாதம்! இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள்! சந்தன வாடை; சாம்பிராணி வாசம்; நெய்ச் சோறு, கறிச் சாப்பாடு! பள்ளிவாசல்களிலும், பஜார் திடல்களிலும் பன்னிரெண்டு நாட்கள் தொடர் பயான்கள்! மீலாது மேடைகள்; ஊர்வலங்கள்.


தமிழக மற்றும் கேரள முஸ்லிம்கள் மவ்லிது என்னும் அரபிப் பாடல்களைப் புனிதமான வணக்கமாகக் கருதிப் பாடி வருகின்றனர்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவற்றை நிறைவேற்றாதவர்கள் கூட ரபீயுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் இந்த மவ்லிதைத் தவறாமல் நிறைவேற்றி விடுவார்கள்.

ரமளான் மாத இரவில் நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குபவருக்கு முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அது போன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரம் வந்து விட்டால் வியாபாரத்தை விட்டு விட்டு பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும்.

இதற்கெல்லாம் பள்ளிவாசலுக்குச் செல்லாதவர்கள் ரபீயுல் அவ்வல் மாதத்தில் மவ்லிது என்னும் அரபிப் பாடலைக் கேட்பதற்காகவும், அதைத் தொடர்ந்து வழங்கப்படும் நேர்ச்சையை வாங்குவதற்காகவும் பள்ளிவாசலுக்குச் செல்வார்கள். அந்த அளவுக்கு மவ்லிது என்பது இவர்களிடம் மிகப் பெரும் வணக்கமாகக் கருதப்படுகின்றது.
எந்த ஒரு வணக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ் கூறியிருக்க வேண்டும்; அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வணக்கத்தைச் செய்து காட்டியோ, அல்லது சொல்லியோ இருக்க வேண்டும். அல்லது நபித்தோழர்கள் செய்த செயலை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அந்தச் செயல் அவனிடமிருந்து ஏற்கப்படாது. அந்த வணக்கத்தால் மறுமையில் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக தீமை தான் கிடைக்கும்.

நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில் அதில் இல்லாததைப் புதிதாக யார் உண்டாக்குகின்றானோ அவனது அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2697

இந்த இஸ்லாம் மார்க்கத்தை இறைவன் தன்னுடைய தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாக, அவர்கள் வாழும் போதே பூர்த்தியாக்கி விட்டான். இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறிக் காட்டுகிறான்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 5:3

அல்லாஹ்வால் முழுமைப்படுத்தப் பட்ட இந்த மார்க்கத்தில் மவ்லிது இருக்கவில்லை. இந்த மவ்லிது தோன்றியது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் தான். தமிழகத்தைச் சேர்ந்த சிலர் தான் இதை இயற்றினார்கள். உலகில் எத்தனையோ மொழி பேசக் கூடிய முஸ்லிம்கள் இருந்தும் தமிழ் மற்றும் மலையாளம் பேசும் முஸ்லிம்களிடம் மட்டும் தான் மவ்லிது ஓதும் வழக்கம் உள்ளது.

இந்த மவ்லிதில் வரக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும், அல்லாஹ்வின் பண்புகளை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்து, நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்தக் கூடியதாகவும், குர்ஆன், ஹதீசுடன் நேரடியாக மோதக் கூடியதாகவும் உள்ளது.

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.
அல்குர்ஆன் 11:6

(முஹம்மதே!) உமது குடும்பத்தினரைத் தொழுமாறு ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை)அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.
அல்குர்ஆன் 20:132

இந்த வசனங்களில் செல்வத்தை அளிக்கும் அதிகாரம், உணவளிக்கும் அதிகாரம் தனக்கே இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் இதற்கு மாற்றமாக மவ்லிதின் வரிகள் இந்தப் பண்புகளை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கி அழகு பார்க்கின்றன.


  • என் வறுமை, கவலை காரணமாக கையேந்துகிறேன்.
  • உங்களின் அளப்பரிய அருளையும் வள்ளல் தன்மையையும் நான் நம்பியுள்ளேன்.
  • இந்த ஏழை மூழ்குவதற்கு முன்னால் காப்பாற்றி விடுங்கள்.
  • உங்கள் தாராளத் தன்மையால் எரியும் வெப்பத்தை அணைத்து விடுங்கள்


இவை சுப்ஹான மவ்லிதில் இடம் பெறும் வரிகளாகும். நபி (ஸல்) அவர்களுக்கு வறுமையை விரட்டும் அதிகாரம் இருந்திருந்தால் அவர்களே வறுமையில் வாடியிருக்க மாட்டார்கள். மேலும் சத்திய ஸஹாபாக்களும் வறுமையில் வாடியிருக்க மாட்டார்கள்.

தங்குவதற்கு இடமில்லாமலும், இறந்த பிறகு போர்த்துவதற்கு ஆடை இல்லாமலும் எத்தனையோ நபித் தோழர்கள் கஷ்டப்பட்டுள்ளார்கள். அவர்களில் எவரும் நபியவர்களிடம் சென்று வறுமையைப் போக்கும் படி முறையிட்டதில்லை.

இறைவனுக்கு மட்டுமே உரித்தான இன்னொரு பண்பு பாவங்களை மன்னிக்கும் ஆற்றலாகும்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.
அல்குர்ஆன் 3:135

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!அல்குர்ஆன் 39:53


  • படைத்த ரப்புல் ஆலமீனின் பண்பான இந்த மன்னிக்கும் ஆற்றலை, மவ்லிதை இயற்றியவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்து மகிழ்கிறார்கள்.
  • நீங்களே பாவங்களை மன்னிப்பவர்.
  • அழித்தொழிக்கும் குற்றங்களையும் மன்னிப்பவர்.
  • தவறுகளை மறைக்கக் கூடியவரும் நீங்கள் தான்.
  • என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்.
  • என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்.


இவ்வாறு இந்த சுப்ஹான மவ்லிதில் வரும் யாநபி பைத் என்ற பாடல் கூறுகின்றது.

இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு முன், பின் பாவங்களை மன்னித்து விட்டதாகத் தன் திருமறையில் கூறுகிறான்.
(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.
அல்குர்ஆன் 48:1, 2, 3

இறைவனால் முன், பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதே என்று நபியவர்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடாமல் இருந்ததில்லை. மாறாக ஒரு நாளைக்கு நூறு தடவைக்கு மேல் பாவ மன்னிப்புத் தேடியுள்ளார்கள். மக்களையும் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடும்படி வலியுறுத்துகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! நீங்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள். நான் ஒரு நாளையில் நூறு தடவை அவனிடம் பாவ மன்னிப்புத் தேடுகின்றேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2702

நபியவர்களுக்குப் பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் இருந்தால் அவர்கள் இறைவனிடம் தினமும் நூறு தடவை பாவ மன்னிப்புத் தேடியிருக்க மாட்டார்கள். மக்களையும் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுமாறு கூறியிருக்க மாட்டார்கள். மாறாக,மக்களே! நீங்கள் என்னிடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்; நான் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவன்' என்று தான் கூறியிருப்பார்கள்.
அது மட்டுமில்லாமல்,யாரையும் மன்னிக்கும் அதிகாரமோ, தண்டிக்கும் அதிகாரமோ உமக்கு இல்லை' என நபி (ஸல்) அவர்களை நோக்கி வல்ல அல்லாஹ் கண்டிப்பாகக் கூறி விட்டான்.

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
அல்குர்ஆன் 3:128

பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் நபி (ஸல்) அவர்களுக்கும் இல்லை. வேறு எந்த நபிமார்களுக்கும் வழங்கப்படவில்லை. யாருக்குமே வழங்காத ஆட்சியதிகாரத்தை சுலைமான் நபியவர்களுக்கு இறைவன் வழங்கினான். ஆனால் அவர்களுக்குக் கூட பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இல்லை. அவர்கள் இறைவனிடம் தான் பாவ மன்னிப்புத் தேடியுள்ளார்கள்.

என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்'' எனக் கூறினார்.
அல்குர்ஆன் 38:35

திருமறையில் இறைவன் தன்னுடைய தோழர் என்று பாராட்டும் இப்ராஹீம் (அலை) அவர்களும் இறைவன் தான் பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
தீர்ப்பு நாளில் என் தவறை அவன் மன்னிக்க வேண்டும்'' என ஆசைப்படுகிறேன்.
அல்குர்ஆன் 26:82

இப்படி ஏராளமான வசனங்களையும் நபிமொழிகளையும் மறுத்து, வல்ல நாயனுக்கு இருக்கக்கூடிய பண்புகளை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய நச்சுக் கருத்துக்களும், குப்பைகளும் தான் இந்த மவ்லிதில் அடங்கியுள்ளன.

தன் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட மிகப் பெரும் அநியாயக்காரன் யார்? என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

இதோ எங்கள் சமுதாயத்தினர் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றைப் பற்றி அவர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்?
அல்குர்ஆன் 18:15

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.அல்குர்ஆன் 6:21

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தன் மீது பொய் கூறுபவர்களின் தங்குமிடம் நரகம் என்று எச்சரித்துள்ளார்கள்.

என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி),நூல்: புகாரி

அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் இவ்வளவு கடுமையாக எச்சரித்திருந்தும் இந்த மவ்லிதுப் பாடல்களில் அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களையும் சம்பந்தப்படுத்தி பல்வேறு கட்டுக்கதைகள் கூறப்பட்டுள்ளன.

அல்லாஹ்வின் பெயராலும் அவனது தூதரின் பெயராலும் இட்டுக்கட்டப்பட்ட இந்தப் பாடல்களைப் பாடுவது பாவமாகாதா? நன்மை என்று எண்ணிக் கொண்டு, நரகத்திற்கு இழுத்துச் செல்லும் இந்தச் செயலை இனியும் நாம் ஆதரிக்கலாமா?

குர்ஆன், ஹதீசுக்கு முரண்பட்ட போதனைகளும், குப்பைகளும் நிறைந்துள்ள இந்த மவ்லிதைப் புறந்தள்ளி விட்டு, குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் பொருளுணர்ந்து படித்து, செயல்படக் கூடியவர்களாக ஆக வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக!


குறிப்பு:மவ்லிது மாதங்களில் வழங்கப்படும் சாப்பாட்டை தவ்ஹீதை அடிப்படையாக கொண்ட  சில சகோதரர்கள் பள்ளிவாசால்களில் தரும் சுவைமிகுந்த சாப்பாட்டிற்காக பல்வேறு வெட்டி சால்ஜாப்புகளை (சமாளிப்பு) சொல்லி நா ருசிகொண்டு அதை சாப்பிடுகின்றனர்.காரணம் கேட்டால் மவ்லிதை ஓதி என்ன இந்த சாப்பாட்டிலா ஊதுகிறார்கள் என்று தன் அறியாமையை வெளிபடுத்துகிறார்கள்.நோக்கம் தான் முக்கியம் அந்த உணவு மற்ற நாட்களில் சமைக்கப்படாமல் எதன் காரணமாக அந்த மாதத்தில் சமைக்கப்படுகிறது என்பதை அறிந்தும் அறியாதவர்கள் போல தங்களை காட்டிகொள்கின்றனர் இது தவறு,பாவம் ஆகும்.மவ்லித் உணவை உண்பது பித்அத் ஆகும்......  

மவ்லித் சம்மந்தமான இந்தக்கட்டுரையும் படிங்க



thanks:onlinepj.com

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

2 comments:

  1. Assalaamu alaikkum Tvp brother.
    rompa naalaachu ungaludaiya intha valaippuuvirku vanthu.
    sorry en tamil font work aahaathathaal ippadi thanglish la ezhuthumpadi aachu.
    anaivarukkum vizhippunarvu tharakkuudiYA nallathoru pathivu.ivarrai purinthu mavulithai viddu muzhuvathumaahaa nam makkal niinguvatharkku naam ellaam valla allaahvidam dua seyvom.
    thangalukku enathu paaraattukkal brother.

    apsara

    ReplyDelete
  2. வ அலைக்கும் சலாம்,

    நெடுநாள் ஆனாலும் இந்த தளத்தை மறக்காமல் நினைவு கூர்ந்து வந்தமைக்கு நன்றி சகோ.

    இனி தொடர்ந்து தொடர்பில் இருங்கள் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete