தியாகச் சுடர் இப்ராஹிம் நபி- தியாக திருநாள் ஸ்பெஷல்

Tuesday, October 15, 2013
இவ்வுலகில் நீதிகள் மறைந்து,அநீதிகள் எப்பொழுதெல்லாம் தலைதூக்குகிறதோ,அந்த சமுதாய மக்களை நல்வழி படுத்த ஏக இறைவன் தன் தூதர்களை இந்த மனித சமூதாயத்திற்கு அனுப்பினான்.எண்ணற்ற நபிமார்களில் இறுதி தூதர் தான் முஹம்மது நபி(ஸல்)அவர்கள்.முஹம்மது நபி அவர்கள் இந்த முஸ்லிம் சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தை பெற்ற தூதர் ஆவார்கள்.ஒவ்வொரு முஸ்லிமும் தன் உயிர்,தன்னுடைய வசதிகள்,சொத்து சுகம் ஆகியவற்றை விட முஹம்மது நபி அவர்களை உயர்வாக கருத வேண்டும் அப்படி தான் கருதுகிறார்கள்.

கால நாகரிக மாற்றத்தால் மனிதனை மனிதனாக நாம் மதிக்கிறோம்,மனசாட்சியுடன் நடக்கிறோம்,இவர்களில் இருந்து விதிவிலக்கானவர்களுக்காவே பற்றா குறைக்கு மனித உரிமை கழகங்களின் மூலம் மனித உரிமையை நிலை நாட்டுகிறோம்.இவையெல்லாம் இந்த நாகரிக உலகில்,விஞ்ஞனம் வளர்ச்சியில் உடச்சத்தில் இருக்கிறோம் என்றெல்லாம் பேசும் இந்நாளில் காட்டு மிராண்டிகள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இப்பொழுதே இப்படி என்றால் 1400 வருடங்களுக்கு முன் ???கற்பனை கூட செய்ய முடியாத மனித மிருகங்களாக வாழ்ந்த சமுதாயத்திற்கு தான் தூதராக அனுப்பபட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்.அந்த மக்களிடத்திலே இந்த சத்திய மார்கத்தை எடுத்து சொல்லும் பொழுது பல கஷ்டங்களையும், இன்னல்களையும் சந்தித்தார்கள்.இந்த சமுதாயத்திர்காகாக பல தியாகங்களையும் செய்தார்கள்,இதானாலே நபி (ஸல்) அவர்கள் 14 நூற்றாண்டிற்கு பின்னும் முஸ்லிம் சமுதாயத்தால் மதிக்கப்படக் கூடியவர்களாக,கண்ணியமிக்கவராக உள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்களே பல சந்தர்பத்தில் நபி இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மக்களிடத்திலே அவர்களை பற்றி எடுத்து சொல்லியுள்ளார்கள்.தான் இப்ராஹிம் நபி அவர்களின் வழிதோன்றல் என்பதால் தன்னை பற்றி குறிப்பிடும் பொழுது சில சமயங்களில் என் தந்தை இப்ராஹிம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.அப்படி இப்ராஹிம் நபி என்ன தான் செய்தார்கள் வாருங்கள் பார்போம். 

இந்த சத்திய மார்கத்தை எடுத்து சொல்லும் பொழுது,ஏற்படும் இன்னல்களுக்கும்,இடையூறுகளுக்கும் மத்தியில் தான் கொண்ட கொள்கையில் எப்படி உறுதியாக இருக்கவேண்டும் என்பதற்கு நபி இப்ராஹிம் அவர்களின் முழு வாழ்வும் கொள்கை பிடிப்போடு இருக்க வேண்டும் என்று விரும்பும் சகோதரர்களுக்கு நல்ல முன் உதாரணம்.

அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் குடும்பத்தில் இப்ராஹிம் நபி அவர்கள் பிறந்தாலும்.இறைவனை பற்றி சிறுவயதிலையே சிந்தித்து உண்மையான இறை கொள்கையை அறிந்துக்கொண்டார்கள்.

இப்ராஹிம் நபி கண்ட முதல் சோதனையே அவர்களின் தந்தை தான். இப்ராஹிம் நபியோ இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைதூதர் ஆனால் அவரின் தந்தையோ போலி கடவுள்களை சிலையாக செய்யும் சிற்பி.

தன் தந்தையிடம் இஸ்லாத்தின் உண்மை கொள்கையை இப்ராஹிம் நபி எடுத்து சொன்னதும் பிரச்னை தலைதூக்கியது.கொள்கையில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் பிணக்கு ஏற்பட்டாலும் குருதி(ரத்த) உறவை வெட்டிவிடவில்லை அவர்கள்,இருந்தாலும் அவர்களின் தந்தை இறுதிவரை இறை நிராகரிப்பாலராகவே இறந்து விட்டார்.சொல்லேனா மனதுயரத்தில் இப்ராஹிம் நபி இருந்தாலும் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.

தனி மனிதனின் உயிரையும்,உடமைகளையும் பாதுகாக்க பலவித கட்டமைப்புகள் இன்று நமக்குண்டு,ஆளும் ஆட்சியாளர்கள் நீதி மறுத்தாலும் வீதியில் வந்து போராடவும் நமக்கு உரிமை உண்டு ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அணைத்து உரிமைகளையும் பெற்ற சர்வாதிகாரிகளாக இருந்தார்கள்.அவர்கள் சொல்வது தான் நீதி வைத்தது தான் தீர்ப்பு.அவர்களின் கொள்கைக்கு எதிராக யாரும் எதுவும் சொல்லி விட முடியாது,வாயை திறந்தாலே கடுமையான தண்டனை தான்.தன்னையே கடவுள் என்று சொல்லி கொள்ளும் ஒரு ஆட்சியாளரிடம் நீ கடவுள் இல்லை அவன் சர்வ வல்லமை படைத்தவன்,என்றென்றும் உயிரோடு இருப்பவன் அவன் தான் அல்லாஹ் என்று சொன்னால் சொன்னவரின் நிலை என்னவாக இருக்கும்?நீங்கள் நினைப்பது சரி தான் மரண தண்டனை தான்....

 மிகப்பெரிய குழி தோண்டி அதில் விறகுகளையும்,மற்ற எரி பொருட்களையும் போட்டு பக்கத்தில் கூட நெருங்க முடியாத நெருப்பு குண்டத்தை வளைக்கிறார்கள்.அதில் தூக்கி எரியும் முன்னர் தன்னை கடவுளாக ஏற்றால் உனக்கு தண்டனை இல்லை என்கிற ஒரு செய்தியும்  நபி இப்ராஹிம் அவர்களுக்கு முன் வைக்கப்படுகிறது.நாமாக இருந்தால்  ஒரு பேருக்காவது இப்பொது சொல்லிவிடுவோம் என்கிற எண்ணம் தோன்றும் ஆனால் அவர்களோ அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் யாரும் இல்லை என்கிற கலிமாவை மீண்டும் சொல்கிறார்கள்.நெருப்பு குண்டத்தில் தூக்கி எறியபட்டாலும் அல்லாஹ்வால் எந்த சேதாரம் இன்றி காப்பாற்றபடுகிறார்கள்.தன் உயிரையும் உண்மை கொள்கைக்காக கொடுக்க முன்வந்தது எவ்வளவு பெரிய தியாகம்.

இப்ராஹிம் நபி அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவர்களின் முதிய வயதில் அவர்களுக்கு அல்லாஹ் குழந்தை பாக்கியத்தை தருகிறான்.இப்ராஹிம் நபி அவர்களுக்கு இரண்டு மனைவிகள் இரண்டாம் மனைவி மூலயமாக தான் குழந்தை பெறுகிறார்கள்.அந்த மனைவியையும்,நீண்ட வருடங்களுக்கு பின் தனக்கு பிறந்த அந்த குழந்தையையும்.அரபு தேசத்தில் உள்ள பாலைவனத்தில் தனியே விட்டுவிட்டு திரும்பி கூட பார்க்காமல் வரும்படி இறை கட்டளை வருகிறது.இந்த நேரத்தில் நாம் மனதில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு ஆண்மகன் நீண்ட வருடங்களுக்கு பின் பிறந்த குழந்தையை மட்டும் விரும்பமாட்டான்,அந்த குழந்தையை தனக்கு பெற்று தந்த தன் மனைவியையும் விரும்புவான் இது தான் மனிதனின் இயல்பு,மனோதத்துவம் அனைத்தும்.

சுட்டெரிக்கும் பாலைவனம்,கடக்க வேண்டிய தூரமோ வெகு வெகு தொலைவு.இப்ராஹிம் நபி வாழ்ந்த இடமோ பாலஸ்தின் பகுதி.குழந்தையையும்,மனைவியையும் சென்று விட வேண்டிய பகுதியோ அரபு பாலைவனம்.

புது பூமி,புது சூழல் அங்கு சாப்பிட என்னவெல்லாம் கிடைக்குமோ தெரியாது,தட்ப வெப்ப சூழ்நிலை எப்படி இருக்குமோ அதுவும் தெரியாது.வாகன வசதி பெருகிவிட்ட இந்நாளில் கூட இவ்வளவு பெரிய தூரத்தை கடக்க வேண்டும் என்றால் நிச்சயம் பல  மணி நேரங்கள் பிடிக்கும்,ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன் எவ்வளவு மாதங்கள் பிடித்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது.

அவசரப்பட்டு மனைவியையும், குழந்தையையும் தனியே விட முடிவு செய்து விட்டோம் இருந்தாலும் பரவா இல்லை நாம் இப்பொழுதே வீடு திரும்பி விடலாம் என்று யோசிக்க அந்த தூரமும்,பயண நேரமும் ஒத்துழைத்தாலும் கொள்கை உறுதி நிச்சயமாக நம்மை அசரவைகிறது.இப்படி ஒரு கொள்கை உறுதியா?அவசரத்திற்கு கடன் கேட்கும் உறவினர்களுக்கு நாளை தருகிறேன் என்று உணமையாகவே வாக்குறுதி கொடுத்திவிட்டு,மறுநாளுக்குள் என்ன என்ன காரணத்தினாலோ நம் முடிவு மாறிவிடும் பொழுது நிச்சயம் இந்த கொள்கை உறுதி மதிக்கத்தக்கது,நினைவில் கொள்ளதக்கது.

கொதிமணல் சுட்டெரிக்கும் பகுதியில் குழந்தையையும்,மனைவியையும் ஏற்றுக் கொண்ட முடிவின் படி தனியே நபி இப்ராஹிம் அவர்கள் விட்டு செல்கிறார்கள்.அல்லாஹ் அந்த குழந்தையையும்,அவரின் தாயரையும் காப்பாற்றி அவர்கள் அங்கு வாழ வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருகிறான். அந்த குழந்தை தான் "இறைதூதர் இஸ்மாயில்".

பல வருடங்களுக்கு பின் தன் குழந்தையையும்,மனைவியையும் காண இப்ராஹிம் நபி அங்கு செல்கிறார்கள்.தன் மகனான நபி இஸ்மாயிலுடன் அங்கு தங்குகிறார்கள்.தங்க கூடிய ஒரு நாளில் தன்  மகனை பலி கொடுப்பதாக கனவு ஒன்றை காணுகிறார்கள்.விழித்ததும் தன்  மகனிடம் அந்த கனவை சொல்கிறார்கள் இறைவன் நாட்டம் அது தான் என்றால் அப்படியே செய்யுங்கள் என இஸ்மாயில் நபி சொல்கிறார்கள்.

நீண்டு வருட காத்திருப்புக்கு பின் பெற்ற மகன்,பாலைவன மணலில் அவர்களை தனியே விட்டது,மீண்டும் அவரோடு சேர்ந்து வாழ்வது. இப்படி நியாமனா காரணங்கள் இப்ராஹிம் நபி அவர்களுக்கு இருந்த பொழுதும் கனவை நினைவாக்க நாடுகிறார்கள் அதுவும் இந்த கனவு சைத்தானின் வேலையாக இருக்கும் அல்லது இது ஒரு கெட்ட கனவாக  இருக்கும் என்று இப்படி எல்லாம் நினைத்து கொண்டிராமல் இது இறைவனின் புறத்திலிருந்து வந்த உண்மை கனவு தான் என்று உறுதியாக இருந்தார்கள்.

தன் மகனை பலி கொடுக்கும் பொழுது கத்தி அறுபட மறுக்கிறது.அல்லாஹ் உங்கள் மகனை பலி கொடுக்க வேண்டாம் அதற்கு பதில் ஆடு ஒன்றை பலி கொடுக்க சொல்கிறான்.

இவர்களின் இந்த தூய தியாகத்தை போற்றும் வகையிலேயே ஒவ்வொரு ஹஜ் பெருநாளின் பொழுதும் வசதி படைத்தவர்கள் குர்பான் (அல்லாஹ்விற்காக அறுப்பது) கொடுக்க வேண்டும் என்கிற சட்டம் நபி (ஸல்) அவர்களின் உம்மத் ஆன நமக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.

பல விதமான சோதனைகளிலும் இப்ராஹிம் நபி தன் தியாகங்களை முன்வைத்து அல்லாஹ்விற்காக செய்ததால் தான் அல்லாஹ் அவர்களை தன் நண்பன் (கலீலுல்லாஹ்) என்று குர்ஆனில்  குறிப்பிடுகின்றான்.  
அந்த புனித மிக்க ஹஜ் பெருநாளில் இப்ராஹிம் நபி அவர்களின் தியாகத்தை மனதில் கொண்டு நாம் குர்பான் கொடுக்க வேண்டும்.

பெருமைக்காகவோ பகட்டுக்காகவோ குர்பான் தரக்கூடாது:

எங்கள் வீட்டில் நாங்கள் பல வருடமாக குர்பான் கொடுக்கிறோம் என்று பெருமை அடிப்போர் ஊருக்கு சிலர் இருப்பார்கள்.அதே போல இன்னும் சிலர் எங்கள் குடும்பத்தின் சார்பாக இத்தனை ஆடுகள் / மாடுகள் / ஒட்டகம் அறுக்கிறோம் என்று பெருமை பெசுவோர்களும் உள்ளனர்.இந்த குணங்களை அறவே நாம் விட்டொழிக்க வேண்டும்.

குர்பான் கொடுக்கும் பொழுது,இந்த குர்பான் பிராணியை விலை கொடுத்து வாங்கியதாலோ,அல்லது அதை அறுக்கும் உரிமை பெற்றதாலோ இந்த பலி பிராணியை விட நான் பெரியவன் இல்லை அல்லாஹ் தான் பெரியவன் என்கிற எண்ணம் நம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.நல்ல குணம் படைத்தவர்களாக,அல்லாஹ்வுக்காக எத்தகைய கஷ்டங்களையும் தாங்கி தியாகம் செய்யும் நன் மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆகி அருள் புரிவானாக ஆமின்.  



இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

1 comment:

  1. மாஷா அல்லா!
    நல்ல பகிர்வு..!

    ReplyDelete