எகிப்தில் கடல் பிளந்த அதிசியம்

Monday, November 11, 2013
பல நூற்றாண்டுகளுக்கு முன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ கொள்கையை தன் சமுதாயத்திற்கு எடுத்து சொல்லியவர்கள் நபி மூஸா(அலை) அவர்கள்.இந்த சத்திய பிரசாரத்தை எடுத்து சொல்லும் பொழுது தன் சமுதாய மக்களாலையே பெரும் இன்னல்களையும், இடையூறுகளையும் சந்தித்தார்கள்.இஸ்லாமிய லட்சிய கொள்ளகை உள்ளவர்கள் அனைவருக்கும் அவர்களின் வாழ்வு ஒரு முன் உதாரணமாகும்.


இறுமாப்பும்,ஓர் இறை கொள்கையும்:

ஓர் இறை கோட்பாடு எங்கே நசுக்கப்படுகிறதோ அங்கேயே பீரிட்டு கிளம்பக்கூடிய தன்மை இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு.(வேறு சில கொள்கை இப்படி தோன்றினாலும் தோன்றிய வேகத்தில் மண்ணுக்கு அடியில் புதையுண்டு செல்வதை கண் கூடாக நாம் காண முடிகிறது).

மூஸா அலை அவர்கள் தன்னை வளர்த்த ஃபிர்அவ்னிடம் இந்த ஓர் இறை கொள்கையை எடுத்து சொன்ன பொழுது பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

*யார் இந்த ஃபிர்அவ்ன்? 

ஃபிர்அவ்ன் (Pharaoh) அமாலிக்கா (அமலேக்கிய) அரசப் பரம்பரையில் வந்த 19 வது எகிப்து நாட்டு அரசனின் புனைபெயர். கிப்தீ (Coptic) குலத்தில் பிறந்த இவன் கி.மு. 15 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்ரவேலர்களைக் கொத்தடிமைகளாக நடத்திவந்தான். வரலாற்றாசிரியர்கள் இவனை இரண்டாம் ரம்சேஸ் (Ramses II) என்று குறிப்பிடுகின்றனர்.

ஃபிர்அவ்ன் அரசன் என்பதையும் தாண்டி தன்னை "நான் தான் உயர்வான இறைவன்"என்று பெருமை அடித்து கொண்டிருந்தான்.இந்த பெருமையின் காரணமாக தன்னை பெரும் பெரும் சிலைகளாக வடித்து மக்களை வணங்க சொன்னான்.இப்படிபட்டவனிடம் தான் தூய ஓர் இறை கொள்கையை  மூஸா (அலை) அவர்கள் சொன்னார்கள்.

அவனின் செவிப்பறையில் அந்த அழைப்பு விழுந்ததே தவிர செவியின் ஊடாக உட்சென்று மூளையை அடையவில்லை.சத்திய கொள்கையை நபி மூஸா(அலை) அவர்கள் எவ்வளவோ முறை அவனிடம் எடுத்து சொல்லியும் பயனளிக்கவில்லை.

இந்த பிரசாரங்கள் ஃபிர்அவ்னுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.பூமியை படைத்து,அதன் அதன் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்பவன் அல்லாஹ் என்ற ஓர் இறைவான் தான் என்று மூஸா சொல்லியதோடு மட்டுமல்லாமல்,நீ இறைவன் இல்லை,உன்னை வணங்க மாட்டேன் என்றும் எவ்வளவு தைரியமாக என் முன்னே சொல்கிறார்.இப்படியே இதை விட்டுவைத்தால் தனக்கும்,தன் புகழுக்கும் ஆபத்து என்றும்,இவரையும் இவரை பின் பற்றும் சொற்ப கூட்டத்தையும் முழுவதுமாக ஒழித்துகட்டினால் தான் தனக்கு நிம்மதி என்று உறுதி கொண்டான்.

ஆணவமும் அழிவும்:

தன் படை வீரர்களை அழைத்து கொண்டு ஆணவத்துடன் நபி மூஸா (அலை)அவர்களையும் அவர்களின் உம்மத்களையும் அழிக்க புறப்பட்டான் ஃபிர்அவ்ன்.

தன்னையும் தன் சமுதாயத்தையும் காப்பற்றிக்கொள்ள எதிரிகள் இருந்த நகரத்தை விட்டே செல்ல நாடினார்கள் மூஸா (அலை)அவர்கள்.இவர்கள் தப்பித்து செல்வதை தடுத்து இந்த கூட்டத்தை கொள்ள புறப்பட்டார்கள் ஃபிர்அவ்னும் அவனுடைய பட்டாளமும்.

மூஸா (அலை) அவர்களும்,அவர்களின் கூட்டமும் தப்பித்து பிழைக்க ஓடிய பொழுது பாதை எது என்றே அறியாமல் ஓடி கடலின் குறுக்காக வந்துவிட்டார்கள்.கண்ணெதிரே எதிரிகள் முதுகுக்கு பின் ஆர்பரிக்கும் கடல்.நாம் வசமாக ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களிடம் மாட்டிக்கொண்டோம்  என்று மூஸா (அலை)அவர்களின் சமுதாயத்தவர்கள் சொன்னார்கள்.

ஃபிர்அவ்ன் முன்பை விட இவர்களின் மேல் கொடுமைகளை இனி மிக  நிறைய புரிய வாய்ப்புண்டு.இனி செய்வதற்கொன்றும் இல்லை என்றே அந்த சமயம் இருந்தது இறை கட்டளை மூஸா நபி அவர்களுக்கு வரும் வரையில்.

அல்லாஹ்வின் கட்டளைகிணங்க மூஸா நபி அவர்கள் தன் கை தடியால் கடலை ஓங்கி அடித்தார்கள்.கடல் இரண்டாக பிளந்தது.மூஸா நபி அவர்களும்,அவர்களை ஈமான் கொண்டு அல்லாஹ்வை ஏற்ற அந்த கூட்டம் உயிர் தப்பியது ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். 

மூஸா நபி அவர்களையும் அவர்களின் கூட்டத்தார்களையும் அல்லாஹ் காப்பாற்றியதால் தான் நாம் முஹர்ரம் 9,10 ஆஷுரா நோன்பு வைக்கின்றோம்.  
ஆஷுரா நோன்பு:

.நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்றிருப்பதை பார்த்து, இது என்ன? என வினவினார்கள். அதற்கு அவர்கள், மூஸா (அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் பகைவன் (ஃபிர்அவ்னிடமிருந்து) அல்லாஹ் காப்பாற்றிய ஒரு நல்ல நாளாகும் என்றார்கள், (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அந்த நாளில் நோன்பு நோற்று உங்களைவிட மூஸா (அலை) அவர்கள் வியத்தில் நான் மிக தகுதியுடையவர் எனக்கூறி தானும் அந்த நோன்பை நோற்று அந்த நோன்பை நோற்கும்படி (தன் தோழர்களுக்கும்) ஏவினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஆஷுரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர் வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

இந்த நோன்பை நாமும் நோற்று நமது குடும்பத்தார்களையும் நோன்பு நோற்க ஆர்வபடுத்த வேண்டும்.

ஆஷுராவின் படிப்பினை:

இன்னல்களும்,பிரச்சனைகளும் நம்மை எதிர் நோக்கும் பொழுது எகின் என்னும் "நிலைகுலையாத" தன்மை நம்மிடம் இந்த வரலாறு ஏற்படுத்தவே இறைவன் இச்சம்பவத்தை நமக்கு சொல்கிறான்.

நாம் வாழும் சூழலில் இஸ்லாம் பல தகவல் தொடர்பு சாதனங்களின் மூலமாக தவறான முறையில் சித்தரிக்கப்பட்டு,தாக்குதலுக்கு உட்பட்டாலும்  "நிலைகுலையாத" தன்மையின் மூலம் அவற்றை எதிர் கொண்டு இஸ்லாத்தை நாம் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.

பொய் புரட்டு வாதங்களை கொண்டு  இஸ்லாம்  குறிவைக்கப்படுவதால் உண்மையை எடுத்து சொல்வதில் சோர்வடைந்து இந்த சத்திய கொள்கையை விட்டே நாம் விரண்டோட கூடாது.உண்மையை சொல்வதென்றால் இஸ்லாத்தின் எதிரிகள் இப்படி நாம் வேருண்டோடுவதையே விரும்புகின்றனர்.இவர்களுக்கு வழி விடாமல் இஸ்லாமை நாம் வழுவாக பற்றி பிடிக்க அல்லா நம் அனைவருக்கும் துணை புரிவானாக............   


அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைகின்றனர்.(தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைபடுத்தாமல் விட மாட்டன்.

அல் குர்ஆன்:9:32 
        

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

3 comments: