வாழ்வில் வெற்றி பெற

Wednesday, May 23, 2012

அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் உறவினர்கள் கூட இறைக்கட்டளையின்படி நடக்காவிட்டால் அவர்கள் இறைத்தூதர்களின் உறவினர்கள் என்பதற்காக மறுமையில் வெற்றியடைய முடியாது.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையாக இருந்த ஆஸர்,இறைத்தூதரின் தந்தை என்பதற்காக
அவர் மறுமையில் வெற்றியடைந்து விட முடியாது. அவருக்காக பாவமன்னிப்புக் கூட கேட்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை.
உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.
(
அல்குர்ஆன் 60:4)
இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே! அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்;சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:114)
இதைப் போன்று நபி நூஹ் (அலை) மற்றும் லூத் (அலை) அவர்களின் மனைவிமார்கள் மார்க்கத்திற்கு முரணாக நடந்தனர். அவர்கள் இறைத்தூதரின் மனைவி என்பதால் அவர்கள் சொர்க்கம் போக முடியவில்லை. மாறாக நரகவாதிகள் என்று தெளிவாக அல்லாஹ் கூறியுள்ளான்.
நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை.இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்! என்று கூறப்பட்டது.
(
அல்குர்ஆன் 66:10)
இதைப் போன்று நூஹ் (அலை) அவர்களின் மகன், இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாததால் அவனையும் கடல் பேரலையால் மூழ்கடித்ததாக அல்லாஹ் கூறுகின்றான். அவர்களின் தந்தை, மகன் உறவு பயனளிக்கவில்லை.
நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக! என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.
இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும்உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறினார்.
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே! என்று நூஹ் கூறினார்.
ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும் என்றுஅவன் கூறினான். அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான். (அல்குர்ஆன் 11:40-43)
இவ்வுலகத்தின் அருட்கொடையாக வந்த நபிகளாரின் தந்தையும் தாயும் கூட இஸ்லாத்தை ஏற்காததால் அவர்களும் நரகவாதிகளாக ஆகிவிட்டார்கள். அவர்களின் உறவும் அல்லாஹ்விடத்தில் எந்தப் பயனையும் ஏற்படுத்தவில்லை.
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:முஸ்லிம் (1777)
ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நரக) நெருப்பில் என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில் தான் (இருக்கிறார்கள்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (347)

மார்க்கத்திற்கு முதலிடம் கொடுத்த நபிகளார்
மிகவும் அன்பிற்குரியவர்களாக நேசித்த தன் மகள் பாத்திமா (ரலி) அவர்கள் மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்த போது அன்பிற்குரிய மகளின் செயல் என்று அதை அங்கீகரிக்காமல் அதைக் கண்டிக்கும் வண்ணமாக அவர்களது வீட்டிற்குச் செல்லாமல் திரும்பி வந்துவிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கன் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல, “நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்) என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி (2613)
எந்தச் சோதனை வந்தாலும் எதிர்த்து நின்று போராடக் கூடிய ஈமானிய வலிமை மிகுந்த ஏகத்துவவாதிகள் பலரும் உறவு முறை என்று வந்து விட்டால் அவர்களது ஈமானிய நிலை ஆட்டம் கண்டு விடுவதையும், அவர்கள் மிக உறுதியாக நின்றாலும் அவரது மனைவிமார்கள் அவர்களது மதியை மயக்கி ஈமானை மலுங்கடித்து விடச் செய்வதையும் காண்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்றால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முன்மாதிரியை நம் வாழ்வில் எடுத்து நடக்க வேண்டும். தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்கள். மார்க்க விஷயம் என்று வந்து விட்டால் நபியவர்கள் தானும் ஆடவில்லை, தன் சதையையும் ஆடவிடவில்லை.

சிறந்த தோழர்கள்
பயனளிக்காத இந்த உறவுக்காக மறுமை வாழ்க்கையைப் பாழாக்கி விடாதீர்கள். மறுமை வாழ்க்கைக்குப் பயனளிக்கும் மார்க்கக் கடமைகளுக்கு முதலிடம் கொடுங்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறிய கட்டளையை ஏற்று நடங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். மறுமை நாளில் சிறந்த தோழமை உங்களுக்குக் கிடைக்கும்.
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர்,அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4:69)
மறுமை நாள் ஏற்படும் போது வரும் சப்தத்தைக் கேட்டவுடன் நம்மை விட்டும் ஓட்டம் எடுக்கும் உறவுகள் ஒருபுறம் இருக்க, அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் மிக உயர்ந்த நபிமார்கள், உயிர் தியாகிகள், உண்மையாளர்கள், நல்லவர்கள் ஆகியோருடன் இருக்கும் நல்வாய்ப்பு கிட்டும். இந்த வாய்ப்பைப் பெறுவதற்கு முழு முயற்சியை நாம் எடுப்போம்.

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment