ஊதா கலரு ரிப்பன்

Wednesday, September 18, 2013
எங்கே கேட்டினும் இந்த பாடலின் வரிகளையே கேட்க முடிகிறது. திரைப்படம் என்பது சமூக பொறுப்புடன் செயல் பட வேண்டிய நிலையிலிருந்து முற்றிலும் மாறி அது வியாபார நோக்கில் சென்று கொண்டிருக்கிறது. 

சந்தைபடுத்துதல் (MARKETING) என்கின்ற வியாபார யுக்தியை பயன்படுத்தி,தன் படங்களுக்கு, படத்தின் பாடல்களுக்கு மக்கள் மத்தியிலே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி விற்று காசாக்கிவிடுகின்றனர்.

இப்பொழுது உள்ள படங்கள் கண் கூசும் அளவிற்குள்ள ஆபாசமும்,ரத்த வெறி கொலை காட்சிகளும் சர்வ சாதாரணமாக காட்டப்படுகின்றது. படத்தில் தோன்றும் நாயகிகளோ எந்த அளவிற்கு ஆடை குறைப்பு செய்யமுடியுமோ அந்த அளவின் எல்லைக்கே சென்றுவிடுகின்றனர்.

45 வருடங்களுக்கு முன் எம்.ஆர்.ராதா அவர்கள் மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பின் வருமாறு கூறினார்.

"இப்போ எல்லாம் சினிமாவ பெரியவங்களே பார்க்க முடியல அவ்வளோ ஆபாசம்,இப்படி பட்ட சினிமாவை சிறியவர்களை பார்க்க அனுமதிக்கலாமா.சினிமா பார்க்கும் மகனை கண்டிக்காமல் பெற்றோர்களே அவனை படத்திற்கு அழைத்து செல்வதும்,படம் பார்க்க காசு தருவதும் தவறு"
எத்தனையோ வருடங்களுக்கு முன் உள்ள சினிமாவே கண்டிக்க கூடிய வகையில் இருந்தால் இப்பொழுது உள்ள திரைப்படங்களின் நிலை என்ன என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

தன் மகன்/மகள் படத்தின் வசனங்களையும்,பாடல்களையும் அழகாக சொல்வான் என்று பெருமை பேசிக்கொள்ளும் பெற்றோர்கள் தான் இப்பொழுது ஏராளம்.தன் பிள்ளைகளின் பெயர்களை கூப்பிட்டு உனக்கு பிடித்த பாடல் டி,வீ ல போடுறாங்க சீக்கிரம் வா என அழைக்கும் பெற்றோர்கள் எத்தனை எத்தனையோ.

முன்பெல்லாம் குடும்பம் ஒரு கட்டுகோப்பில் இயங்கியது,பெற்றோர்களுக்கு ஓரளவிற்கு பயந்து இருந்தனர்.படம் பார்க்க செல்வது கூட பெற்றோர்களுக்கு தெரியாவண்ணம் பார்த்துக் கொண்டனர்.ஆனால் இப்பொழுது டி.வீ யில் ஓடும் ஆபாச பாடல்களை குடும்ப சகிதமாக அமர்ந்து பார்க்க பழகிவிட்டனர், அவர்களுக்கு டி.வீ  சேனலை மார்த்தக்கூட தோணவில்லை.

திரைப்படங்கள் மக்களை கெடுத்தது பத்தாது என்று டி,வீ  சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆபாசத்தை நடன நிகழ்ச்சி என்கின்ற பெயரிலே வியாபாரம் பேசுகிறது.அதிலே அரைகுறை ஆடையோடு ஆடும் பெண்களை, தன் பிள்ளையும் அவளை போல ஆடுவாள் என்று  ஒப்பிட்டு பேசும் பெற்றோர்களே !!உங்களுக்கு தோணவில்லையா இது அருவருக்கதக்கது என்று??

அறிவை வளர்க்கும் நிகழ்சிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு என்னமோ பாடுவதும்,ஆடுவதுமே திறன் வளர்க்கும் துறையாகவும்,அதன் மூலம் சினிமாவிற்கு சென்று புகழ் அடையலாம்,கனவில் கூட நினைக்கமுடியாத பணத்தை சம்பாரிக்கலாம் என்கின்ற போலி தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

டி.வீ  களில் சினிமா சம்மந்தப்பட்ட கேள்வி பதில் நிகழ்சிகளும் அடிக்கடி ஒளிபரப்பாகின்றது.அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு வீட்டின் வாண்டுகள் சரியான பதிலை சொல்வதை கண்டு பெருமிதம் கொள்பவர்களே!!உங்களுக்கு தோணவில்லையா இது வீணானது என்று??

பள்ளி,கல்லூரி நிகழ்சிகளில் நாடகம்,அறிவை வளர்க்கும் போட்டிகள்,பேச்சு போட்டிகள் போன்ற நிகழ்சிகள் எல்லாம் சமீபமாக வெகுவாக குறைந்து வருகின்றது.அந்நிகழ்ச்சிகளில் காலியாகும் போட்டிகளில் எல்லாம் சினிமா குத்து பாடல்களின் நடனங்களும்,பாடல் போட்டிகளும் தான் நிரப்புகின்றன.

யாழ் இனிது குழல் இனிது என்பார்கள்,மழலை சொல் கேளாதோர்:
உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றேன்,மதிய உணவிற்கு பின் வீட்டிலே அமர்ந்து இருக்கும்பொழுது அங்கிருந்த வாண்டுகளில் ஒருவன் டி.வீ யை ஆன் செய்ததும்,யே விஜய் படம் ஓடுது அதை வை என்று ஒரு வாண்டும், இன்னொரு நடிகரின் பெயரை சொல்லி அந்த படம் ஓடுது அதை வை என்றும் தங்களுக்குள் வாய் சண்டை போட்டனர்.ஒருவாறாக அவர்களே சமாதானம் ஆகி ஒரு படத்தை வைத்தனர் அதில் ஓடும் பாடலை தன் குழந்தை தமிழில் ஒரு பையன் சேர்ந்து பாடிகொண்டே இருந்தான்.இது போன்றவர்களிடத்திலே அவர்கள் படிக்கும் பாடத்திலே ஏதாவது கேட்டால் முழிப்பார்கள்.அதற்கு அவர்கள் பெற்றோர்களும் சேர்ந்துக்கொண்டு அந்த பாடம் இன்னும் அவனுக்கு நடத்தலா நடக்காத பாடத்த கேள்வி கேட்ட அவனுக்கு என்ன தெரியும் என்று தங்கள் குழந்தைகளின் தவறுகளை அவர்கள் சமாளிப்பார்கள்.

வளரும் சமுதாயத்தை தவறான பாதையிலே தட்டழக்கவிடுவதிலே பெற்றோர்களின் பங்கு இன்றைய சூழலிலே அதிகமாக உள்ளது.அவர்கள் தங்களுக்குள் உள்ள பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்கலாம்.அதற்க்கு இறைவன் துணை புரிவானாக. 

  இதை பிறருக்கும் பகிரலாமே

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

2 comments: