எனக்கு வந்தா தக்காளி சட்னி,உனக்கு வந்தா ரத்தமா?

Thursday, July 11, 2013
ரைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கி, பெருச்சாளியைப் பெருமாளாக்கி"
என்ற கிராமப்புற சொல்வடைக்குப் பொருத்தமானவை
செய்தி ஊடகங்கள் எனும் அளவுக்கு நம்நாட்டுச்செய்திகளின் தரம் தாழ்ந்துவிட்டது.
பெரும்பாலான ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனேயே செயல்பட்டு வருகின்றன. சாதி, மத, சிந்தாந்த ஆதரவு அல்லது அவற்றுக்கெதிரான கருத்துருவாக்கக் கருவிகளாகவே ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன. கீழ்கண்ட செய்தியிலுள்ளவை மிகவும் அதிர்ச்சியளிக்கும் விடயம். எனினும், இதைச் செய்தியாக்கியுள்ள ஊடகங்களின் நேர்மையை அளவிடுவதற்கு இதன் உள்ளடக்கமே சாட்சி.
"லாரியை வழி மறித்து, ஐந்து டன் அமோனியம் நைட்ரேட் வெடிப்பொருட்களை கடத்திய வழக்கில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் நெடுஞ்சாலை நகரில், கிருஷ்ணா கெமிக்கல்ஸ் என்ற பெயரில், கோடீஸ்வரன் என்பவர், வெடி பொருட்களுக்கு, தேவையான மூலப் பொருளான, அமோனியம் நைட்ரேட் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு, சீலநாயக்கன்பட்டியில், ஒரு குடோன் உள்ளது. குடோனில் இருந்து, 5 டன் அமோனியம் நைட்ரேட் மூட்டைகளை ஏற்றி, நேற்று முன்தினம் மாலை, கோவை, காரமடைக்கு, லாரி ஒன்று புறப்பட்டு சென்றது. லாரியை, ஈரோட்டை சேர்ந்த டிரைவர் அருண்குமார் ஓட்டி சென்றார். அவருடன், கெமிக்கல் நிறுவன பணியாளர் ராஜன் சென்றார்.

கொண்டலாம்பட்டி, பைபாஸ் அருகே, லாரி சென்று கொண்டிருந்தது. சிலர், லாரியை வழிமறித்தனர். போலீஸ் என்று அறிமுகம் செய்த கொண்ட அந்த கும்பல், உடையாப்பட்டி பைபாசுக்கு, லாரியை ஓட்டுமாறு கூறியது. உடையாப்பட்டியில், அருண்குமார், ராஜன் ஆகியோரை இறக்கிவிட்டு, லாரியை கடத்தி சென்று, பைபாஸ் ரோட்டின் ஒரு பகுதியில், 5 டன் அமோனியம் நைட்ரேட்டை இறக்கி கடத்தியது. லாரியை, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் நிறுத்திவிட்டு, கும்பல் தப்பி ஓடிவிட்டது. அருண்குமார், இது குறித்து, அன்னதானப்பட்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள், உடையாப்பட்டியில், பதுங்கியிருந்தது தெரிய வந்தது. கும்பலை, போலீசார் சுற்றி வளைத்தனர். கும்பலைச் சேர்ந்த ஏழு பேரையும், கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 5 டன் அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலத்தில் வெடி மருந்து குடோன் வைத்திருக்கும் வேறு உரிமையாளர்களின், ஆலோசனைப்படி, கடத்தல் கும்பல் செயல்பட்டதா அல்லது வெளி மாநிலங்களுக்கு கடத்த முயற்சி செய்ததா என, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்."


மேற்கண்ட செய்தியை மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் செய்தியில் உள்நோக்கம் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. எனினும், முழுதும் செய்தியை வாசித்தால் வெடிபொருட்கள் அடங்கிய லாரியைக் கடத்தியவர்கள் விபரம் இல்லை. ஏழுபேர் கொண்ட கும்பல் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எத்தனை டன் வெடிமருந்து, கடத்தியவர்கள் எத்தனைபேர், எங்கு எப்படிக் கடத்தினார்கள் என்ற விபரங்களை எல்லாம் விரிவாக வெளியிட்டுள்ள அப்பத்திரிக்கையின் செய்தியாளர் மறந்தும் கடத்தியவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை. இதுவே வெடிமருந்து லாரியைக் கடத்தியவர்கள் அனைவரும் அல்லது அவர்களுள் ஒருவனோ முஸ்லிமாக இருந்திருப்பின் நாளிதழ்கள் எப்படியெல்லாம் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கும்?

1) தமிழகத்தைத் தகர்க்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு
2) வெடிமருந்து லாரியைக் கடத்தியவர்களுக்கு பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்பா?
3) லஸ்கரே தொய்பா இந்தியன் முஜாஹிதீன் தொடர்புக்கு ஆதாரம்
4) சத்தீஸ்கர் நக்சல் தீவிரவாதிகளுக்கு உதவ தமிழக இஸ்லாமியத் தீவிரவாதிகள் திட்டமா?


நிச்சயம் வெடிமருந்து லாரியைக் கடத்தியவர்கள் முஸ்லிம்களாக இருந்திருந்தால் இவ்வாறுதான் சில ஊடகங்கள் தலைப்பிட்டு இஸ்லாமியர்கள்மீதான வன்மத்தைத்தீர்த்துக்கொண்டிருக்கும். காவல்துறையிடம் பிடி பட்டிருப்பவர்களின் சாதி/மதத்தைக் குறிப்பிட வேண்டும் என்பதன்று நோக்கம். குற்றவாளிகளின் பெயரை மட்டும் வைத்து செய்தியை பில்டப்செய்து ஒட்டுமொத்த சமூகத்தையே குற்றப்பரம்பரையாகச் சித்திரிக்கும் நேர்மையற்ற போக்கை ஆதிக்க வெறிகொண்ட பத்திரிக்கைகள் நிறுத்தவேண்டும் என்பதைச் சுட்டவே இவ்வாக்கம்.

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment