நபி(ஸல்)அவர்களின் மீது இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள தவறான குறைகளை களைய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.P.J அவர்களின் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலே இக்கட்டுரை.
நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர் எனபதையும் வாசகர்களுக்கு நினைவு படுத்துகின்றேன்.
சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெருவில் நடந்து சென்றனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இது ஸகாத் வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் இதை எடுத்து நான் சாப்பிட்டிருப்பேன்' என்று கூறினார்கள்.
'கீழே கிடக்கும் ஒரே
ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துச் சாப்பிடுவதில் ஏழைகளுக்கான அரசின் கருவூலத்தைச் சேர்ந்ததாக இருக்குமோ' என்பதைத் தவிர வேறு எந்தக் கூச்சமும், தயக்கமும் இல்லை' என்று அகில உலகமே மதிக்கும் மாமன்னராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கும் சமயத்தில் மக்கள் மத்தியில் பிரகடனம் செய்கிறார்கள். இவ்வாறு கூறினால் கவுரவம் போய் விடுமே என்றெல்லாம் அவர்கள் கருதவில்லை.
நமக்குச் சொந்தமான நாலணா கீழே விழுந்து விட்டால் நாலு பேர் பார்க்கும் போது அதை எடுப்பதற்கு நமக்கே கூச்சமாக இருக்கிறது. 'இந்த அற்பமான பொருளைக் கூட எடுக்கிறானே என்று மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பார்களே' என்று கருதுகிறோம். நம்மைப் போன்ற சாதாரண மனிதன் பார்க்கின்ற கௌரவத்தைக் கூட இம்மாமனிதர் பார்க்கவில்லை.
இன்னொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு ஒட்டகம் இருந்தது. 'அள்பா' என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். இந்நிலையில் ஒரு கிராம வாசி ஒரு ஒட்டகத்துடன் வந்தார். (அவரது ஒட்டகத்துக்கும், நபிகள் நாயகத்தின் ஒட்டகத்துக்கும் வைக்கப்பட்ட போட்டியில்) அக்கிராம வாசியின் ஒட்டகம் முந்திச் சென்றது. இது முஸ்லிம்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தியது. இதனை அறிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதைத் தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கையாகும்' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2872, 6501
எத்தனையோ மன்னர்கள் தங்களின் வளர்ப்புப் பிராணிகள் போட்டியில் தோற்றதற்காக அப்பிராணிகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். தங்களைச் சேர்ந்த எதுவுமே தோல்வியைத் தழுவக் கூடாது என்ற கர்வமே இதற்குக் காரணம்.
மன்னராட்சி முடிந்து மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் கூட தமது நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தோல்வியடையும் போது அவர்கள் மீது அழுகிய முட்டைகளையும், தக்காளிகளையும் வீசுவதைப் பார்க்கிறோம். சாதாரண மக்கள் கூட தம்மைச் சேர்ந்தவர்கள் விளையாட்டில் தோற்பதைக் கேவலமாக எண்ணுகின்றனர்.
சாதாரண நிலையில் உள்ள ஒரு கிராமவாசி தனது கோழியோ, ஆடோ சண்டையில் தோற்று விட்டால் அது தனக்கு ஏற்பட்ட பெரிய அவமானம் என்று கருதுகிறான்.
இந்த மாமனிதரைப் பாருங்கள்! இவர் மாமன்னராகவும் திகழ்கிறார். அந்த நிலையில் இவரது ஒட்டகம் போட்டியில் தோற்று விடுகிறது. இவர் அது பற்றி எள் முனையளவும் அலட்டிக் கொள்ளவில்லை. அலட்டிக் கொள்ளாமல் இருப்பது கூட ஆச்சரியமானது அல்ல. அந்த நேரத்தில் அவர்கள் கூறிய அறிவுரை தான் மிகவும் ஆச்சரியமானது.
'உயருகின்ற ஒவ்வொரு பொருளும் ஒரு நாள் இறங்கியே ஆக வேண்டும்' என்னே அற்புதமான வாசகம்!
தனது ஓட்டகம் தோற்றது தான் சரி. இப்படித் தோல்வி ஏற்படுவது தான் நல்லது என்று போட்டியில் பங்கெடுத்த எவரேனும் கூறுவதுண்டா?
இந்த ஒட்டகத்தை எந்த ஒட்டகத்தினாலும் முந்த முடியாது என்ற நிலையே கர்வத்தின் பால் கொண்டு செல்லும் என இம்மாமனிதர் நினைக்கிறார். கோழிச் சண்டையில் தனது கோழி வெற்றி பெற வேண்டும் என்று சாதாரண மனிதன் விரும்புவானே அந்த விருப்பம் கூட இவருக்கு இருக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன். நபிகள் நாயகத்தை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டம் நெருக்கித் தள்ளியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. 'எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள்' என்று கூறினார்கள். 'இம்மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காண மாட்டீர்கள்' எனவும் கூறினார்கள்.
நூல் : புகாரி 2821, 3148
இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாபெரும் ஆட்சித் தலை வராக இருந்த போது நடந்த நிகழ்ச்சியாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரில் பங்கெடுத்து விட்டு படை வீரர்களுடன் வருகிறார்கள். மாமன்னர் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு மக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்களை வழிமறிக்கிறார்கள். மன்னர்க ளுக்கு முன்னால் கைகட்டிக் குனிந்து மண்டியிடுவது தான் அன்றைய உலகில் வழக்கமாக இருந்தது. மன்னரிடம் நேரில் பேசுவதோ, கோரிக்கை வைப்பதோ கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.
உலகத்தின் மன்னர்களெல்லாம் இத்தகைய மரியாதையைப் பெற்று வந்த காலத்தில் தான் சர்வ சாதாரணமாக நபிகள் நாயகத்தை மக்கள் நெருங்குகிறார்கள். எந்தப் பாதுகாப்பு வளையமும் இல்லாததால் நெருக்கித் தள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்தில் இம்மாமனிதருக்கு கோபமே வரவில்லை. மன்னருடன் இப்படித் தான் நடப்பதா என்று சப்பு அடையவும் இல்லை. அவரது படை வீரர்களும் தத்தமது வேலைகளைப் பார்த்தார்களே தவிர நபிகள் நாயகத்தை நெருக்கித் தள்ளியவர்கள் மீது பலப் பிரயோகம் செய்யவில்லை. போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக மேலாடையாக நபிகள் நாயகம் அணிந்திருந்தனர். அந்த ஆடையும் முள்ளில் சிக்கி உடன் மேற்பகுதியில் ஆடையில்லாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போதும் அம்மக்கள் மீது இம்மாமனிதருக்கு எந்த வெறுப்பும் ஏற்படவில்லை.
'என்னை முள்மரத்தில் தள்ளி விட்ட உங்களுக்கு எதுவுமே தர முடியாது' என்று கூறவில்லை. மாறாக 'இம்மரங்களின் எண்ணிக்கை யளவுக்கு ஒட்டகங்கள் இருந்தாலும் அவற்றையும் வாரி வழங்கு வேன்' என்று கூறுவதிருந்து புகழையும், மரியாதையையும் அவர்கள் இயல்பிலேயே விரும்பவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அரசுக் கருவூலத்தில் நிதி இல்லாத நேரத்தில் யாராவது உதவி கேட்டு வந்தால் வசதி படைத்தவர்களிடம் கடனாகப் பெற்று வழங்குவார்கள். ஸகாத் நிதி வசூக்கப்பட்டு வந்தவுடன் கடனைத் திருப்பிக் கொடுப்பார்கள். ஒரு தடவை இங்கிதம் தெரியாத மனிதரிடம் வாங்கிய கடனைக் குறித்த நேரத்தில் கொடுக்க இயலவில்லை. அப்போது நடந்தது என்ன என்பதைப் பாருங்கள்!
அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கடன் கொடுத்திருந்த ஒரு மனிதர் அதை வசூப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது கடுமையான முறையில் அவர் நடந்து கொண்டார். நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அவரை விட்டு விடுங்கள்! ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாகப்) பேசும் உரிமை உள்ளது' எனக் கூறினார்கள். மேலும், 'அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்குக் கொடுங்கள்' எனக் கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! அதை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் உள்ளது' என்று நபித் தோழர்கள் கூறினார்கள். 'அவருக்கு அதைக் கொடுங்கள். ஏனெனில், அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவராவார்' எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி 2306, 2390, 2401, 2606, 2609
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் மாபெரும் ஆட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சி இது.
கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டு வந்தவர் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி கடனைத் திருப்பிக் கேட்கிறார். நபித்தோழர்கள் அவர் மேல் ஆத்திரப்படும் அளவுக்குக் கடுமையாக நடந்து கொள்கிறார்.
ஆட்சியில் உள்ளவர்களுக்கு யாரேனும் கடன் கொடுத்தால் அதைத் திரும்பிக் கேட்க அஞ்சுவதைக் காண்கிறோம். அச்சத்தைத் துறந்து விட்டு திருப்பிக் கேட்கச் சென்றாலும் ஆட்சியில் உள்ளவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அப்படியே வாய்ப்புக் கிடைத்தாலும் ஏதோ பிச்சை கேட்பது போல் கெஞ்சித் தான் கொடுத்த கடனைக் கேட்க முடியும். ஆட்சியிலுள்ளவர்களால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் என்ற அச்சத்தினால் தயங்கித் தயங்கி தனது வறுமையைக் கூறி கூழைக் கும்பிடு போட்டுத் தான் கடனைக் கேட்க முடியும்.
கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கடனை வசூலிப்பது ஒரு புறமிருக்கட்டும் சாதாரண முறையில் கூடக் கேட்க முடியாது.
அகில உலகும் அஞ்சக் கூடிய மாபெரும் வல்லரசின் அதிபராக இருந்த நபிகள் நாயகத்தைக் கடன் கொடுத்தவர் சர்வ சாதாரணமாகச் சந்திக்கிறார். கொடுத்த கடனைக் கேட்கிறார். அதுவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறார். உலக வரலாற்றில் எந்த ஆட்சியாளரிடமாவது யாராவது இப்படிக் கேட்க முடியுமா?
இவ்வாறு கடுஞ்சொற்களை அவர் பயன்படுத்தும் போதும், ஏராளமான மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தும் போதும் 'தாம் ஒரு இறைத்தூதர்; மாமன்னர்; மக்கள் தலைவர்; இதனால் தமது கௌரவம் பாதிக்கப்படும் என்று அந்த மாமனிதர் எண்ணவில்லை.
தமது நிலையிருந்து இதைச் சிந்திக்காமல் கடன் கொடுத்தவரின் நிலையிருந்து சிந்திக்கிறார்கள். வாங்கிய கடனைத் தாமதமாகத் திருப்பிக் கொடுப்பதால் கடன் கொடுத்தவருக்கு ஏற்படக் கூடிய சங்கடங்களையும், சிரமங்களையும், மன உளைச்சல்களையும் நினைத்துப் பார்க்கிறார்கள். இதனால் தான் 'கடன் கொடுத்தவருக்கு அவ்வாறு பேசும் உரிமை உள்ளது' எனக் கூறி அவரைத் தாக்கத் துணிந்த தம் தோழர்களைத் தடுக்கிறார்கள்.
தமது மரியாதையை விட மற்றவரின் உரிமையைப் பெரிதாக மதித்ததால் தான் இதைச் சகித்துக் கொள்கிறார்கள்.
மேலும் உடனடியாக அவரது கடனைத் தீர்க்கவும் ஏற்பாடு செய்கிறார்கள். கடனாக வாங்கிய ஒட்டகத்தை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் தம்மிடம் இருக்கிறது என்பதை அறிந்த போது அதையே அவருக்குக் கொடுக்க உத்தரவிடுகிறார்கள்.
கடுஞ்சொற்களை என்ன தான் சகித்துக் கொண்டாலும் இத்தகையவருக்கு வாங்கிய கடனை விட அதிகமாகக் கொடுக்க யாருக்கும் மனம் வராது. முடிந்த வரை குறைவாகக் கொடுக்கவே உள்ளம் தீர்ப்பளிக்கும்.
ஆனால், இந்த மாமனிதரோ தாம் வாங்கிய கடனை விட அதிக மாகக் கொடுக்குமாறு உத்தரவிட்டதுடன் இவ்வாறு நடப்பவர்களே மனிதர்களில் சிறந்தவர் எனவும் போதனை செய்கிறார்கள்.
இதனால் தான் முஸ்லிமல்லாத நடுநிலையாளர்களும் இவரை மாமனிதர் எனப் போற்றுகின்றனர்.
பதவியைப் பயன்படுத்தி எந்தவிதமான புகழையும், மரியாதையையும் அவர்கள் விரும்பவில்லை என்பதற்கு அற்புதமான சான்றாக இது அமைந்துள்ளது.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். நஜ்ரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட, ஓரப்பகுதி கடினமாக இருந்த போர்வையை அவர்கள் மேலாடையாக அணிந்திருந்தார்கள். அவர்களை எதிர் கொண்ட ஒரு கிராம வாசி அப்போர்வையைக் கடுமையான வேகத்தில் இழுத்தார். அவர் கடுமையாக இழுத்ததால் நபிகள் நாயகத்தின் தோள் பகுதியில் அந்த அடையாளம் பதிந்ததை நான் கண்டேன். இழுத்தது மட்டுமின்றி அக்கிராமவாசி 'உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திருந்து ஏதேனும் எனக்குத் தருமாறு உத்தரவிடுவீராக' என்று கூறினார். அவரை நோக்கித் திரும்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு ஆணையிட்டார்கள்.
நூல் : புகாரி 3149, 5809, 6088
சாதாரண மனிதன் கூட பொது இடங்களில் தனது சட்டையைப் பிடித்து இழுப்பதைச் சகித்துக் கொள்ள மாட்டான். தனக்கு ஏற்பட்ட அவமானமாக அதை எடுத்துக் கொள்வான்.
உலகின் மிகப் பெரிய வல்லரசின் அதிபரான நபிகள் நாயகத்தை முன் பின் அறிமுகமில்லாத ஒரு கிராம வாசி சர்வ சாதாரணமாகச் சந்திக்க முடிகிறது. சந்திப்பது மட்டுமின்றி தன்னை விடத் தாழ்ந்த வனிடம் எப்படி நடந்து கொள்வாரோ அதை விட அநாகரீகமாக இந்த மாமன்னரிடம் அவரால் நடக்க முடிகின்றது. 'உம்முடைய செல்வத்தைக் கேட்கவில்லை. உம்மிடம் உள்ள அல்லாஹ்வின் செல்வத்தைக் கேட்கிறேன்' என்று கோரிக்கை வைக்க முடிகின்றது.
இவ்வளவு நடந்த பிறகும் மிக மிகச் சாதாரணமாக அந்தக் கிராமவாசியை நோக்கி நபிகள் நாயகத்தால் சிரிக்க முடிகின்றது. அவரது கோரிக்கையை அவர்களால் ஏற்க முடிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) பதவியைப் பெற்ற பின் சாதாரண மனிதனுக்குக் கிடைக்கின்ற மரியாதையும், கௌரவத்தையும் கூட தியாகம் செய்தார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?.

0 comments:
Post a Comment