இது போல உஹதுப் போரின் போது முஸ்லிம்களுக்கு ஆரம்பத்தில் வெற்றி கிடைத்தாலும் இடையில் அவர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டது. தோற்று ஓடிய எதிரிகள் மலைக்குப் பின் புறமாக வந்து சுற்றி வளைத்த போது, செய்வதறியாமல் நபித் தோழர்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர். ஆனால் எதிரிகள் சுற்றி வளைத்துக் கொண்ட பின்பும், தமது தோழர் களில் பெரும்பாலானோர் சிதறி ஓடிய பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் களத்திருந்து ஓட்டம் பிடிக்கவில்லை. அபூதல்ஹா (ரலி) போன்ற மிகச் சிலருடன் சேர்ந்து கொண்டு சமர் புரிந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் முகத்தில் கடுமையான வெட்டுக் காயம் ஏற்பட்டது.
பொதுவாக போரின் போது மன்னர்கள் கட்டளை தான் பிறப்பிப்பார்கள். தாங்கள் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொள்வார்கள். தோல்வி முகம் ஏற்பட்டால் ஓடுவதற்கு ஏற்ற இடத்தில் கூடாரம் அமைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தளபதிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதையும், உத்தரவிடும் தளபதியாக மட்டுமல்லாமல் களத்தில் வாளேந்தும் தளபதியாகவும் திகழ்ந்தார்கள் என்பதையும் இந்நிகழ்ச்சிகளிலிருந்து அறிந்து கொள்கிறோம். அவர்களின் வீரத்திற்கு எடுத்துக் காட்டாக இன்னும் பல நிகழ்வுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகத்தான வீரத்துக்கு ஹுனைன் போர் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
இந்தப் போரின் போது முஸ்லிம்களின் படை பலம் வலிமையுடைய தாக இருந்தது. இதனால் முஸ்லிம்கள் மிகவும் கர்வம் கொண்டிருந் தார்கள். எதிரிகளை எளிதாக வென்று விடலாம் என்று கணக்குப் போட்டனர். இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள். பின்னர் அல்லாஹ் தனது அமைதியைத் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் அருளினான். நீங்கள் பார்க்காத படைகளையும் அவன் இறக்கினான். (தன்னை) மறுத்தோரைத் தண்டித்தான். இது மறுப்போருக்குரிய தண்டனை. பின்னர், தான் நாடியோரை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 9:25,26,27
முஸ்லிம்கள் பின் வாங்கி ஓட்டம் பிடித்ததாகவும் பின்னர் இறைவன் தனது வானவர் படையை அனுப்பி எதிரிகளை வெற்றி கொள்ள வைத்ததாகவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.
ஹவாஸின் எனும் கூட்டத்தினருக்கு எதிராக ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு நடைபெற்ற இப்போரில் பத்தாயிரம் நபித்தோழர்களும் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை ஏற்றவர்களும் இருந்ததாக புகாரி 4333 வது ஹதீஸ் கூறுகிறது.
அப்பாஸ் (ரலி) கூறுகிறார்:
நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போரில் பங்கெடுத்தேன். நானும், அபூ ஸுஃப்யானும் நபிகள் நாயகத்தைப் பிரியாமல் பக்கபலமாக நின்றோம். முஸ்லிம்களும், நிராகரிப்பவர்களும் மோதிக் கொண்டு முஸ்லிம்கள் பின் வாங்கி ஓட்டம் பிடித்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கோவேறுக் கழுதையை நிராகரிப்பவர்களை நோக்கிச் செலுத்தினார்கள். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கோவேறுக் கழுதையின் கடிவாளத்தைப் பிடித்து அது வேகமாகச் செல்வதைத் தடுத்துக் கொண்டிருந்தேன். அபூ ஸுஃப்யான் சேனத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். 'அப்பாஸே மரத்தடியில் உடன்படிக்கை எடுத்தவர்களை அழைப்பீராக' என்று என்னிடம் கூறினார்கள். நான் உரத்த குரலுக்குரியவனாக இருந்தேன். 'மரத்தடியில் உடன்படிக்கை செய்தோர் எங்கே?' என்று எனது உரத்த குரல் அழைத்தேன். தாய்ப் பசு கன்றை அழைப்பதைப் போல் உணர்ந்த அவர்கள் லப்பைக் (இதோ இருக்கிறோம்) என்று விடையளித்தனர். 'போரிடுங்கள்! அன்ஸாரிகளையும் அழையுங்கள்' என்று கூறினேன், அவர்கள் அன்ஸாரிகளை அழைத்தனர். 'பனுஹாரிஸ் கூட்டத்தாரை அழையுங்கள்' என்றேன்; அவர்களும் பனூஹாரிஸ் கூட்டத்தினரே என அழைத்தனர். பின்னர் தமது கைப்பிடியில் சிறு கற்களை எடுத்து வீசி 'முஹம்மதின் இறைவன் மேல் ஆணையாக தோற்றுப் போயினர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதன் பின்னர் எதிரிகள் தோல்வி முகம் கண்டனர்.
நூல் : முஸ்லிம் 3324
சுமார் நூறு நபித்தோழர்களைத் தவிர அனைவரும் ஓட்டம் பிடித்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துணிவுடன் களத்தில் நின்றார்கள். எந்தத் தலைவரும் தனது படையினரின் பின் பலத்தில் தான் களம் காண்பார். படையினர் ஓட்டம் பிடித்து விட்டால் தலைவர்கள் களத்தில் நிற்க மாட்டார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த இக்கட்டான நேரத்திலும் களத்தை விட்டு ஓடவில்லை.
தமது சகாக்கள் பின் வாங்கி ஓடும் போது கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளை நோக்கி தமது கோவேறுக் கழுதையைத் துணிவாக செலுத்துகிறார்கள்.
எதிரிகள் சுற்றி வளைத்த நேரத்தில் தைரியமாக கழுதையை விட்டும் கீழே இறங்கி இருக்கின்ற வீரர்களை அணிவகுக்கச் செய்கின்றனர். பதட்டப்படவில்லை; நிதானம் இழக்கவில்லை.
ஆன்மீகத் தலைவராகவும், இரக்க குணம் கொண்டவராகவும் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தளபதியாகவும், மாவீரராகவும் இருந்தார்கள் என்பது மேலும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
பத்ர் போரில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வீரம் குறித்து அலீ (ரலி) பின்வருமாறு கூறுகிறார்.
பத்ருப் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமே எங்களை நாங்கள் காத்துக் கொண்டோம். அவர்கள் தான் எதிரிகளுக்கு எங்களை விட நெருக்கத்தில் இருந்தனர். அன்றைய தினம் அவர்கள் தாம் கடுமையாகப் போரிட்டனர்.
நூல் : அஹ்மத் 619, 991
எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத போது அலீ (ரலி) போன்ற மாவீரரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னே நின்று தம்மைக் காத்துக் கொண்டதாகவும், எதிரிகளுக்கு மிக நெருக்கத்தில் நின்று நபிகள் நாயகம் (ஸல்) போரிட்டதாகவும் கூறுவதே அவர்களின் மாவீரத்தை அறிந்திடப் போதுமானதாகும்.
பிற மத்தவர்களிடம் அன்பு
மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு மகத்தான நற்பண்பு பிற மதத்தவர்களிடம் அவர்கள் நடந்து கொண்ட முறை எனலாம்.
பொதுவாக ஒரு மதத்தின் ஆன்மீகத் தலைவர்கள் வேறு மதத்தவர்களை இழிவாகவே கருதுவது வழக்கம். அது போல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்பவர் ஒரு மதத்தின் மீது ஆழ்ந்த பற்றுடையவராக இருந்தால் அவரும் பிற மதத்தவர்களை இழிவாகவே கருதுவார்.
ஏற்கனவே தமக்குக் கொடுமைகள் புரிந்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கும் என்றால் அவர் தமக்குக் கொடுமைகள் இழைத்தவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார். உலக வரலாற்றில் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து அனைத்து வகையான தீமைகளையும் எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளை அவர்கள் சம்பாதித்திருந்தனர். அந்த எதிரிகள் மூலம் ஏராளமான கொடுமைகளையும் சந்தித்தனர். பல தோழர்கள் எதிரிகளால் கொன்று குவிக்கப்பட்டனர். ஊரை விட்டே விரட்டியடிக்கப் பட்டனர். இத்தகையோர் மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு சீக்கிரமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.
அவர்களைப் பழிவாங்கியிருந்தால் அதை யாரும் குறை காண முடியாத அளவுக்கு அதற்கு நியாயங்கள் இருந்தன. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கை முழுமையாக ஓங்கியிருந்த காலகட்டத்திலும் யாரையும் பழிவாங்கவில்லை. முஸ்லிமல்லாத மக்களுடன் நட்புறவுடனேயே அவர்கள் பழகி வந்தனர்.
முஸ்லிமல்லாத மக்களுடன் அவர்கள் நடந்து கொண்ட முறைக்கு ஹுதைபியா உடன்படிக்கையும், அப்போது நடந்த நிகழ்வுகளும் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன.
கஃபா ஆலயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகளின் கைவசத்தில் இருந்தாலும் அங்கே ஹஜ் கடமையை நிறைவேற்ற யார் வந்தாலும் அவர்கள் தடை செய்யாமல் இருந்தனர். பல நாட்டவர்களும் ஹஜ் காலத்தில் சர்வ சாதாரணமாக வந்து சென்றனர்.
மேலும் உம்ரா எனும் வணக்கம் செய்ய வருவோரையும் மக்கா வாசிகள் தடை செய்வதில்லை. அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்ற வந்தனர். ஆனால் யாரையும் தடுக்காத அம்மக்கள் நபிகள் நாயகத்தை மட்டும் தடுக்க வந்தனர். அந்தச் சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலப் பிரயோகம் செய்து மக்காவுக்குள் நுழைய முடியும் என்றாலும் எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டு திரும்பி வந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவுக்குச் சென்று வணக்கம் செய்யக் கூடாது என்று எதிரிகள் வழிமறித்தனர். நபித்தோழர்கள் பலர் பலப்பிரயோகம் செய்தாவது மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்று கருதினார்கள்.
ஆனால் இந்த ஆண்டு திரும்பிச் சென்று விட்டு அடுத்த ஆண்டு வந்தால் தடுப்பதில்லை எனவும் அது வரை ஒரு வருட ஒப்பந்தம் செய்து கொள்வது என்றும் எதிரிகளுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமரசம் செய்தனர்.
பல நூறு மைல் தொலைவிலிருந்து பயணம் செய்து வந்தும் காரியம் கை கூடா விட்டால் அதை யாரும் சகித்துக் கொள்ள முடியாது. அதுவும் தமது சொத்து சுகங்களைப் பறித்துக் கொண்டு ஊரை விட்டே விரட்டியடித்தது மட்டுமின்றி தமது சொந்த ஊரில் வழிபாடு நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். மேலும், பல போர்களைச் சந்தித்து அனைத்திலும் தோல்வியைச் சந்தித்த கூட்டத்தினர், நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போரிட இயலாத பலவீனமான நிலைமைக்கு ஆளானோர் தடுக்கும் போது அதைப் பொருட்படுத்தாமல் உள்ளே புகுந்தால் எதுவும் நடந்திருக்காது.
ஆயினும் தமது கை முழுமையாக ஓங்கியிருந்தும் தம்மிடம் நியாயங்கள் இருந்தும் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய உடன் படிக்கையை மேற்கொள்ளச் சம்மதித்தனர்.
நபித்தோழர்கள் பலரும் இதை விரும்பவில்லை. 'நாம் சரியான மார்க்கத்தில் இருக்கும் போது, தவறான கொள்கை உடையோருக்கு ஏன் பணிய வேண்டும்?' என்று உமர் (ரலி) போன்ற நபித்தோழர்களே மறுப்புத் தெரிவித்தனர். ஆயினும் அதை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்கவில்லை.
இரத்தம் சிந்துவதைத் தவிர்க்க எதிரிகள் முன் வரும் போது அதை விட அதிகமாக நபிகள் நாயகம் (ஸல்) இறங்கினார்கள்.
ஒப்பந்தம் எழுத ஆரம்பித்ததும் அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் பெயரால்... என்று நபிகள் நாயகம் (ஸல்) எழுதச் செய்தார்கள். அதை உடனே எதிரிகள் மறுத்தனர். அளவற்ற அருளாளன் என்பது எங்களுக்கு அன்னியமானது; அல்லாஹ்வின் பெயரால் என்று மட்டுமே எழுத வேண்டும் என்று அடம் பிடித்தனர். அதை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொண்டனர்.
அப்துல்லாவின் மகனும் அல்லாஹ்வின் தூதருமாகிய முஹம்மதும்... என்று ஒப்பந்த வாசகத்தை எழுதிய போதும் எதிரிகள் ஆட்சேபித்தனர். 'அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று தான் குறிப்பிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் என்று குறிப்பிடக் கூடாது. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டிருந்தால் நமக்கிடையே ஒப்பந்தம் தேவையில்லேயே' என்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் அல்லாஹ்வின் தூதர் தான்; ஆனாலும் ஒப்பந்தத்தில் அதை அழித்து விடுகிறேன்' எனக் கூறி அலீ (ரலி) யிடம் அதை அழிக்கச் சொன்னார்கள். 'நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் நம்புவதால் அதை அழிக்க மாட்டேன்' என்று அலீ (ரலி) மறுத்து விட்டார். அந்த இடம் எதுவென அறிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்அதைத் தமது கையால் அழித்தனர்.
'எங்கள் ஊரைச் சேர்ந்தவர் இஸ்லாத்தை ஏற்று உங்களிடம் வந்தால், எங்களிடம் அவரைத் திருப்பி அனுப்பிட வேண்டும்' என்று எதிரிகள் நிபந்தனை போட்டனர். நபித் தோழர்கள் இதை அறவே விரும்பாத போதும் நபிகள் நாயகம் (ஸல்) இதையும் ஏற்றனர்.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே அபூஜந்தல் என்பார் இஸ்லாத்தை ஏற்று நபிகள் நாயகத்திடம் ஓடி வந்தார். அவரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு எதிரிகள் கேட்டனர். இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை எதிரிகள் ஏற்கவில்லை. இதிலும் விட்டுக் கொடுத்து அபூஜந்தலை அவர்களிடம் அனுப்பினார்கள்.
இப்படி எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் சமாதானத்தையே விரும்பினார்கள் என்பதும் தமக்குக் கொடுமைகள் புரிந்த எதிரிகளை ஒழிக்க தக்க சந்தர்ப்பம் கிடைத்தும் விட்டுக் கொடுத்தார்கள் என்பதும் இந்த மாமனிதரின் மதம் கடந்த மனித நேயத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.
நூல் : புகாரி 2731, 2732
இஸ்லாமிய மார்க்கத்தில் ஸகாத் எனும் தர்மம் கட்டாயக் கடமை என்பதை முஸ்லிமல்லாத மக்களும் அறிவார்கள். செல்வந்தர்களிடம் திரட்டப்படும் இந்த நிதி எட்டு விதமான பணிகளுக்குச் செலவிடப்பட வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் நல்ணக்கம் வளர்வதற்காக அவர்களுக்காக வழங்குவதும் அப்பணிகளில் ஒன்று என இஸ்லாம் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 9:60)
முஸ்லிமல்லாத மக்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்வதை இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக நபிகள் நாயகம் (ஸல்) ஆக்கினார்கள்.
உலகத்தில் எந்த மதத்திலும் பிற மதத்தினருக்கு உதவுவது மார்க்கத்தில் கட்டாயக் கடமையாக ஆக்கப்பட்டதில்லை. எந்த மதத்திலும் இத்தகைய ஒரு சட்டத்தைக் காணவே முடியாது. சில தனிப்பட்ட நபர்கள் மதம் கடந்து மனித நேயத்துடன் நடந்து கொள்வார்கள். இத்தகையோர் குறைந்த எண்ணிக்கையில் எல்லா மதங்களிலும் இருப்பார்கள். இது அந்தத் தனிப்பட்ட நபர்களின் பெருந்தன்மையினால் ஏற்படும் விளைவு தானே தவிர அவர்கள் பின்பற்றும் மதத்தில் கடமையாக்கப்பட்டதால் அல்ல. ஆனால் நபிகள் நாயகமோ இவ்வாறு பிற சமய மக்களுக்கு வழங்குவதை இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாக ஆக்கினார்கள்.
முஸ்லிமல்லாதவர்களுக்கு இவ்வாறு முஸ்லிம் அரசின் கருவூலத்திருந்து கண்துடைப்பாக, அற்பமாக வழங்குவதா என்றால் நிச்சயம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!
'இஸ்லாத்தின் பெயரால் எங்களுக்கு உதவுங்கள்' என்று இஸ்லாத்தின் பெயரைச் சொல் யார் கேட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள். ஒரு மனிதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தின் பெயரால் உதவி கேட்டார். இரு மலைகளுக்கிடையே அடங்கும் அளவுக்கு அவருக்கு ஆடுகளை வழங்கினார்கள். அவர் தனது சமுதாயத்திடம் சென்று 'என் சமுதாயமே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில் நிதி நெருக்கடியைப் பற்றி அஞ்சாமல் முஹம்மத் வாரி வழங்குகிறார்' எனக் கூறினார்.
நூல் : முஸ்லிம் 4627
'இரு மலைகளுக்கிடையே
அடங்கும் அளவுக்கு ஆடுகள்' என்ற சொற்றொடர் மிக அதிகமாக வழங்கும் போது கூறப்படும் சொல் வழக்காகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத மக்களுக்கு அளவுக்கதிகமாக வாரி வழங்குவது எந்த அளவுக்கு இருந்தது என்றால் இதற்காகவே பலரும் இஸ்லாத்தை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பும் அளவுக்கு இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வளவு வழங்கும் போது பலவீனமாகவோ, முஸ்லிமல்லாத மக்களின் தயவு தேவை என்ற நிலையிலோ இருக்கவில்லை. மாறாக முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருந்தார்கள். நபிகள் நாயகத்திடம் தான் ஆட்சியும் இருந்தது. முஸ்லிமல்லாத மக்களால் இடையூறுகள் ஏதும் ஏற்படும் என்று அஞ்சி அதைத் தவிர்ப்பதற்காக வழங்கவில்லை. மேலும் அனைத்து மதத்தவர்களிடமும் வசூக்கப்படும் வரியிருந்தும் இவ்வாறு வழங்கவில்லை. மாறாக முஸ்லிம்களிடம் வசூலிக்கப்படும் ஸகாத் நிதியிலிருந்து தான் முஸ்லிமல்லாத மக்களுக்கு வாரி வழங்கினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதம் கடந்த மனித நேயத்திற்குச் சான்றாக அமைந்த மற்றொரு நிகழ்ச்சியைக் காணுங்கள்! தொடரும் இன்ஷா அல்லாஹ்...

0 comments:
Post a Comment