நபிகள் நாயகம்vsதலைவர்கள்-(பகுதி 13)



சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....
ரபீஆ (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தைக்கு ஒன்று விட்ட சகோதரர். அவரது மகனைத் தான் ஹுதைல்' என்ற கூட்டத்தார் கொலை செய்திருந்தனர். தம் சகோதரர் மகனை (தம்பியை அல்லது அண்ணனை) கொலை செய்தவர்களை முதல் மன்னிப்பதாக அறிவிக்கிறார்கள். தமது குடும்பத்தார் அனைவரிடமும் இது பற்றிப் பேசி அவர்கள் அனைவரையும் மன்னிக்கச் செய்து தாமும் மன்னிக்கிறார்கள்.

தாம் கூறுவதை தமது குடும்பத்திருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்ற இந்தப் பண்பின் காரணமாகவே அவர்கள் மாமனிதர் எனப்படுகிறார்கள்.

அது போல் வட்டி வாங்குவது இதற்கு முன் தடை செய்யப்படாமல் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் மிகப் பெரிய அளவில் வட்டித் தொழில் செய்தவர் நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) ஆவார்.
வட்டியைத் தடை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு முன் யாரெல்லாம் வட்டிக்குக் கடன் கொடுத்தார்களோ அவர்கள் அசலை மட்டும் தான் வாங்க வேண்டும்; ஏற்கனவே பேசப்பட்ட வட்டியானாலும் அதை வாங்கவும், கொடுக்கவும் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.

'தம்மிடமிருந்தே எதையும் ஆரம்பிக்க வேண்டும்' என்ற கொள்கையின் காரணமாக தமது பெரிய தந்தையின் வட்டிகள் அனைத்தையும் முதல் தள்ளுபடி செய்தார்கள்.

எனது பெரிய தந்தையிடம் வட்டிக்குக் கடன் வாங்கியவர் அசலை மட்டும் கொடுத்தால் போதும். வட்டியைக் கொடுக்கக் கூடாது என்று அறிவிப்புச் செய்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தப் பிரகடனத்தில் மற்றொரு முக்கியமான விஷயமும் அடங்கியுள்ளது.
இன்றைக்குச் சட்டங்களை இயற்றுவோர் எதிரிகளைப் பழிவாங்கிட முன் தேதியிட்டு சட்டங்களை அமுல்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நடந்த குற்றங்களைப் புதிதாக இயற்றப்படும் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது மாபெரும் அநீதி என்ற சாதாரண அறிவு கூட யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
தாம் வகுத்த எந்தச் சட்டத்தையும் தம்மிடமிருந்தும் தமது குடும்பத்திலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். தம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சட்டத்தை மீறினால் மற்றவர்களை விட கடுமையாக அவர்களைத் தண்டிப்பதும் நபிகள் நாயகத்தின் வழக்கம்.

ஸகாத் நிதியை வசூலிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அப்போது இப்னு ஜமீல் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), அப்பாஸ் (ரலி) ஆகிய மூவர் ஸகாத் கொடுக்க மறுத்தனர். இது பற்றி நபிகள் நாயகத்திடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இப்னு ஜமீல் ஏழையாக இருந்தார். அல்லாஹ்வும், அவனது தூதரும் அவரை வசதி படைத்தவராக ஆக்கினார்கள் என்பதற்காகவே ஸகாத் தர மறுக்கிறார். காலித் தனது கவச உடைகளையும், தளவாடங்களையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தவர். எனவே (அவரிடம் ஸகாத் கேட்டதன் மூலம்) அவருக்கு நீங்கள் அநீதி இழைக்கிறீர்கள். அப்பாஸ் அல்லாஹ்வின் தூதராகிய எனது பெரிய தந்தையாக இருக்கிறார். அவர் தன் மீது கடமையான ஸகாத்தைத் தர வேண்டும். மேலும் அது போல் இன்னொரு மடங்கும் அவர் மீது உள்ளது' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி: 1468

காலித் (ரலி) ஸகாத் தராமல் இருந்ததை நபிகள் நாயகம் மன்னிக்கிறார்கள். ஏனெனில் அதை விட அதிகமாகவே அவர் ஏற்கனவே கொடுத்துள்ளார். இப்னு ஜமீல் (ரலி) ஸகாத் கொடுக்க மறுப்பது தவறு தான் எனக் கூறுகிறார்கள். அதாவது அவரிடம் கட்டாயம் ஸகாத் வசூலிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் தமது பெரிய தந்தையிடம் ஸகாத்தையும் வசூலிப்பதுடன் அதே அளவு அபராதமாகவும் வசூலிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
சட்டத்தை மதிக்காத மூவரில் தமது குடும்பத்தினருக்கு மட்டும் அபராதம் விதித்தன் மூலம் குடும்பப் பாசத்தை வென்று காட்டுகிறார்கள்.

பிறர் நலம் பேணல்

ஆட்சித் தலைவர்களானாலும், ஆன்மீகத் தலைவர்களானாலும் ஊரை வளைத்துப் போடுவது, அவர்களின் தகுதிகளில் ஒன்றாகவே ஆகிவிட்டதை நாம் காண்கிறோம்.

தமக்காகவும், தமது கட்சிக்காகவும், இயக்கத்துக்காவும் பொது மக்களின் நிலங்களை வளைத்துப் போடுவதை எவ்வித உறுத்தலு மின்றி செய்து வருவதை நாம் காண்கிறோம். தமக்காக வளைத்துப் போடுவதில் ஒளிவு மறைவான போக்கைக் கடைப்பிடித்தாலும் தமது கட்சிக்காகவும், இயக்கத்திற்காகவும் இடங்களை வளைத்துப் போடுவதில் எவ்வித உறுத்தலும் அவர்களுக்கு இருப்பதில்லை.

ஆன்மீகத் தலைவர்களின் மடங்களுக்காகவும் இத்தகைய நிலை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றில் ஒரு நிகழ்ச்சியைக் காணுங்கள்!

அபூதல்ஹா (ரலி) மதீனாவில் அதிக அளவு பேரீச்சை மரங்கள் வைத்தி ருந்ததன் காரணமாக அதிக வசதியுடையவராக இருந்தார். அவரது சொத்துக் களில் பைருஹா' எனும் தோப்பு அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு எதிரில் அமைந்திருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அங்கே அடிக்கடி சென்று, அங்குள்ள சுவையான தண்ணீரை அருந்துவது வழக்கம். இந்த நிலையில், 'நீங்கள் விரும்புவதிருந்து செலவு செய்யாத வரை நன்மையை அடையவே மாட்டீர்கள்' என்ற வசனம் (3:92) இறங்கியது. அப்போது அபூதல்ஹா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்புவதிருந்து செலவிடாத வரை நன்மையை அடையவே மாட்டீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். எனக்கு மிகவும் விருப்பமான சொத்து பைரூஹா எனும் தோப்பு தான். எனவே அது அல்லாஹ்வுக்காக தர்மமாக ஆகட்டும். அதன் நன்மையையும், பயனையும் அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன். எனவே நீங்கள் விரும்பும் வகையில் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' எனக் கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேண்டாம்! அது இலாபம் தரும் சொத்தாயிற்றே! அது இலாபம் தரும் சொத்தாயிற்றே! நீ கூறுவது எனக்கு விளங்குகிறது. அதை உமது உறவினர்க்கு நீர் அளிப்பதையே நான் விரும்புகிறேன்' என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறே செய்கிறேன்' என்றார். அதைத் தமது உறவினர்களுக்கும், தமது சிறிய தந்தையின் உறவினர்களுக்கும் வழங்கினார்.

இதை அபூதல்ஹா (ரலி) பராமரிப்பில் வளர்ந்த அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 1461, 2318, 2769, 4555, 5611

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்தது. அங்கு தான் இஸ்லாமிய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்று வந்தன. அந்தப் பள்ளிவாசலை ஒட்டிய சிறிய குடிசையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசித்தும் வந்தனர்.

நீதிமன்றமாகவும், போர்ப் பயிற்சி அளிக்கும் இடமாகவும், அரசின் கருவூலமாகவும், தொழுகை நடத்தும் இடமாகவும், கைதிகளைப் பராமரிக்கும் இடமாகவும் அந்தப் பள்ளியின் வளாகம் அமைந்திருந்தது. ஒரு அரசின் அனைத்துப் பணிகளையும், ஆன்மீகப் பணியையும் நிறைவேற்றிட அந்த இடம் போதுமானதாக இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீடும் போதுமான பரப்பளவு கொண்டதாக இருக்கவில்லை. ஒருவர் தொழுதால் இன்னொருவர் தூங்க இடமிருக்காது என்பது தான் அவர்கள் வீட்டின் நிலை. (இது பற்றி முன்னர் விளக்கப்பட்டுள்ளது)

இந்த நிலையில் பள்ளிவாசலுக்கு எதிரிலேயே மதிப்புமிக்க ஒரு சொத்து கிடைக்கிறது. அதுவும் அதன் உரிமையாளரால் மனப்பூர்வமாக அளிக்கப்படுகிறது. அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமையும் நபிகள் நாயகத்திடமே உரிமையாளரால் வழங்கப்படுகிறது. சுவையான தண்ணீரும் அதில் கிடைக்கிறது, அந்தத் தண்ணீரில் நபிகள் நாயகத்துக்கு நாட்டமும் இருந்தது.

இந்த நிலையில் ஒருவர் மனமுவந்து அளிக்கும் அந்தத் தோப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கலாம். தமக்காக இல்லாவிட்டாலும், அரசு மற்றும் ஆன்மீகப் பணிகளுக்குத் தேவை என்ற அடிப்படையில் அதைப் பெற்றுக் கொண்டிருக்கலாம். பொதுவாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகில் இது போன்ற இடம் கிடைக்காது. யாரும் சொத்துக்களை விற்கவும் முன்வர மாட்டார்கள்.

மேலும், இதை அல்லாஹ்வுக்காக வழங்க முன் வருபவர் ஏழையாக இருக்கவில்லை. இதை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வதால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகப் போவதில்லை. அவரது சொத்துக்களைப் பொருத்த வரை இது சிறிய அளவே என்பதால் அவரது வாரிசுகளோ, உறவினர்களோ பாதிக்கப்பட மாட்டார்கள்.

ஆனாலும் இந்த மாமனிதர், இருக்கின்ற அந்த இடமும், குடிசையுமே போதும் என்று நினைத்தார்கள். முதல் உறவினரைத் தான் கவனிக்க வேண்டும் என்று தாம் போதனை செய்து வந்ததை, தமக்காக மாற்றிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. உமது உறவினருக்கே வழங்குவீராக' என்று வலியுறுத்தி, அவ்வாறே செய்யச் சொல்கிறார்கள். இவை அனைத்தையும் மேற்கண்ட நிகழ்ச்சியிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

அத்துடன் அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. அது இலாபம் தரும் சொத்தாயிற்றே என இரு முறை கூறி, அதற்குப் பதிலாக வேறு சொத்தைக் கொடுக்கலாமே என்ற அறிவுரையையும் கூறுகிறார்கள்.

இந்தப் பண்பிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.

பிறர் சிரமப்படுவதைக் கண்டால் அதைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். இதுவும் நபிகள் நாயகத்தின் பண்பாக இருந்தது.

நபிகள் நாயகத்தின் வீட்டு வாசலில் இரண்டு பேர் குரலை உயர்த்தி வாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தனது கடனில் சிறிதளவைத் தள்ளுபடி செய்யுமாறும், மென்மையாக நடக்குமாறும் கேட்டார். அதற்கு மற்றவர் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக இவ்வாறு நான் செய்ய மாட்டேன்' என்று கூறினார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உடனே வெளியே வந்து 'நன்மை செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் 'அல்லாஹ்வின் தூதரே! நான் தான்; இவர் எதை விரும்புகிறாரோ அதன்படியே செய்கிறேன்' எனக் கூறினார்.
நூல் : புகாரி: 2705

மற்றவருக்கு உதவ முடியாது என்று சத்தியம் செய்வதைக் கூட இந்த மாமனிதரால் ஏற்க முடியவில்லை.
மன்னரின் வீட்டருகில் இரண்டு பேர் சண்டையிட்டால் இருவரையும் விரட்டியடிக்குமாறு தான் கூறுவார்கள். ஆனால் இந்த மாமன்னரோ அது என்ன சண்டை என்று உன்னிப்பாகக் கவனித்து பலவீனமானவருக்குச் சார்பாக களமிறங்குவதைக் காண்கிறோம்.
இது போன்ற மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

கஃபு பின் மாலிக் (ரலி), இப்னு அபீ ஹத்ரத் (ரலி)க்கு கடன் கொடுத்திருந் தார். அந்தக் கடனை பள்ளிவாசலில் வைத்து திருப்பிக் கேட்டார். இருவரின் சப்தங்களும் உயர்ந்தன. தமது வீட்டில் இருந்த நபிகள் நாயகத்துக்கு இது கேட்டது. உடனே இருவரையும் நோக்கி வந்தார்கள். 'கஃபே!' என்று அழைத்த போது 'வந்தேன் அல்லாஹ்வின் தூதரே!' என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதி' என்பதை தமது கையால் சைகை செய்து காட்டி 'இந்த அளவு தள்ளுபடி செய்' என்றார்கள். 'அல்லாஹ்வின் தூதரே அவ்வாறே செய்கிறேன்' என்று கஃபு கூறினார். 'நீ சென்று கடனை அடைத்து விடு' என்று மற்றவரிடம் கூறினார்கள்.
நூல் : புகாரி: 457, 471, 2418, 2424, 2706, 2710

கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதையும், கடன் கொடுத்தவர் நல்ல நிலையில் இருப்பதையும் நபிகள் நாயகம் காண்கிறார்கள். பாதிக் கடனைத் தள்ளுபடி செய்தால் கடன் வாங்கியவர்ரால் திருப்பிச் செலுத்த முடியும் என்பதையும் உணர்ந்து அவ்வாறு பரிந்துரை செய்கிறார்கள்.

இது போன்ற கொடுக்கல் வாங்கல் தகறாரின் போது நம்மைப் போன்ற சாதாரண மக்களே கண்டு கொள்ளாமல் ஒதுங்கிச் சென்று விடுவோம். முக்கியப் பிரமுகர்கள் என்றால் இது போன்ற காரியங்களை வேண்டாத வேலை என ஒதுக்கி விடுவார்கள்.

ஆனால் மாமன்னராகவும், மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் ஒருவர் சிரமப்படுவதைக் கண்ட பின் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து உதவுகிறார்கள்.
மக்கள் சிரமப்படுகிறார்கள் என்றால் போலி சம்பிரதாயங்களைக் கூறி மக்களைக் கஷ்டப்பட விடமாட்டார்கள். கஷ்டப்படுவோருக்கு உதவுவதற்குத் தடையாக மத நம்பிக்கை இருக்கக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

அபூ மூஸா (ரலி) கூறுகிறார்:
நான் சிறு கூட்டத்தினருடன் நபிகள் நாயகத்திடம் வந்து வாகனம் (ஒட்டகம் அல்லது குதிரை) கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'என்னிடம் வாகனம் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு வாகனம் எதையும் தர மாட்டேன்' எனக் கூறினார்கள். சிறிது நேரத்தில் அவர்களிடம் ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அஷ்அரி கோத்திரத்தைச் சேர்ந்த அந்தக் கூட்டத்தினர் எங்கே?' எனக் கேட்டார்கள். எங்களுக்கு உயர் தரமான ஐந்து ஒட்டகங்களைத் தந்தார்கள். நாங்கள் திரும்பச் சென்ற போது 'நாம் செய்த காரியத்தில் நமக்கு இறையருள் கிட்டாது' என்று கூறிக் கொண்டு நபிகள் நாயகத்திடம் வந்தோம். 'எங்களுக்கு வாகனம் தர முடியாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினீர்களே? அதை மறந்து விட்டு எங்களுக்கு வாகனம் தந்து விட்டீர்களே' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு வாகனம் தரவில்லை. அல்லாஹ் தான் தந்தான். நான் ஏதேனும் சத்தியம் செய்து விட்டு அதை விடச் சிறந்த காரியத்தைக் கண்டால் சத்தியத்தை முறித்து விட்டு சிறந்ததைத் தான் செய்வேன்' எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி: 3133, 4385, 5518, 6623, 6649, 6680, 6718, 6731, 7555

மனிதர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்பதற்கு மக்கள் எத்தனையோ தவறான நம்பிக்கைகளைக் கேடயமாக வைத்துள்ளனர்.

இரவில் உதவி கேட்டால் இரவு நேரத்தில் பணத்தை வீட்டை விட்டு வெளியே கொண்டு போகக் கூடாது என்பார்கள். அல்லது இந்த நாளில் தர முடியாது, இந்த நேரம் நல்ல நேரம் இல்லை என்றெல்லாம் கூறுவார்கள்.

பிறருக்கு உதவாமல் இருப்பதற்காகத் தான் இது போன்ற நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளனர்.

இந்த மாமனிதரோ தம்மிடம் எந்த வாகனமும் இல்லாததால் தர முடியாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறி விடுகிறார்கள்.

அந்த நேரத்தில் ஒட்டகங்கள் வந்து சேர்ந்தன. ஒட்டகங்கள் வந்ததைப் பார்த்து விட்டு அந்த மக்கள் மீண்டும் தமது கோரிக்கையை முன் வைக்கவில்லை. நபிகள் நாயகம் தான் தாமாக அவர்களை அழைக்கிறார்கள்.
உங்களுக்குத் தருவதற்கு என்னிடம் ஒட்டகங்கள் இப்போது வந்துள்ளன. ஆயினும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டதால் அதைத் தர முடியாத நிலையில் இருக்கிறேன் எனக் கூறினால் அந்த மக்கள் எவ்வித வருத்தமுமின்றி அந்தச் சமாதானத்தை ஏற்றிருப்பார்கள்.

மக்களுக்கு உதவ மாட்டேன் என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்தாலும் அதை நிறைவேற்றத் தேவையில்லை என்பதால் அவர்களுக்கு ஒட்டகங்களைக் கொடுத்து அனுப்பினார்கள். நபிகள் நாயகம் செய்த சத்தியத்தை மறந்து விட்டு நமக்குத் தந்து விட்டார்களோ என்று எண்ணி அம்மக்கள் நினைவு படுத்திய போது 'தெரிந்தே தான் இவ்வாறு செய்தேன். நல்லது செய்வதற்குத் தான் இறைவன் பெயரைப் பயன்படுத்த வேண்டும். நல்லது செய்ய மாட்டேன் என்பதற்காகப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அதன் படி நடக்கத் தேவையில்லை. அதை விடச் சிறந்ததைத் தான் செய்ய வேண்டும். அது தான் எனது நிலை' என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

பொதுவாக தலைவர்கள் மக்கள் கருத்தை மதிப்பது கிடையாது. தாங்களாக ஒரு முடிவை எடுத்துக் கொண்டு மக்கள் மத்தியில் கருத்துக் கேட்பது போல் பாவனை செய்வார்கள். தலைவரின் கருத்துக்கு எதிர் கருத்துக் கூற இயல்பாகவே தயக்கம் ஏற்படும். இதைத் தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு மக்களின் கருத்தாக அதைக் காட்டிக் கொள்வார்கள்.

இப்படித் தான் அமைச்சரவைக் கூட்டங்களும், இயக்கங்களின் பொதுக் குழுக்களும் இயங்கி வருகின்றன.

ஆனால் இந்த மாமனிதர் மக்களிடம் எந்த ஆலோசனை கேட்டாலும் மக்கள் சுதந்திரமாக கருத்துக் கூற எல்லாச் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.

ஹவாஸின் கூட்டத்தினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நபிகள் நாயகத்திடம் வந்தனர். தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை யும், தங்கள் கைதிகளையும் தங்களிடம் தர வேண்டும் என அல்லாஹ் வின் மீது சத்தியம் செய்து கோரிக்கை வைத்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உண்மை பேசுவது தான் எனக்கு மிகவும் விருப்பமானது. கைதிகள் அல்லது பொருட்கள் இரண்டில் ஒன்றைக் கேளுங்கள்' என்றார்கள். இரண்டில் ஒன்றைத் தான் நபிகள் நாயகம் திருப்பித் தருவார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்தவுடன் 'கைதி களையே நாங்கள் கேட்கிறோம்' என்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர் கள் முஸ்லிம்களைக் கூட்டினார்கள். அல்லாஹ்வை அவனது தகுதிக் கேற்ப புகழ்ந்தார்கள். பின்னர், 'உங்கள் சகோதரர்கள் திருந்தி வந்து விட்டனர். அவர்களின் கைதிகளை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க நான் விரும்புகிறேன். உங்களில் கைதிகளை அடிமைகளாகப் பெற்றவர் களில் யார் மனப்பூர்வமாக விட்டுத் தருகிறாரோ அவ்வாறே அவர் தரட்டும். அல்லது கைதிகளை விடுவித்து விட்டு எதிர் காலத்தில் முதன் முதலாக அல்லாஹ் தருவதிலிருந்து பெற்றுக் கொள்ள சம்மதிப்பவர் அவ்வாறு செய்யட்டும்' என்றார்கள். அப்போது அனைவரும் 'அல்லாஹ்வின் தூதருக்காக மனப்பூர்வமாக விட்டுத் தருகிறோம்' என்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உங்களில் இதை ஏற்பவர் யார்? ஏற்காதவர் யார்? என்பதை நம்மால் அறிய முடியவில்லை. நீங்கள் திரும்பச் சென்று நன்கு ஆலோசித்து உங்கள் பிரமுகர்கள் வழியாக முடிவைச் சொல்லி அனுப்புங்கள்' என்றார்கள். பின்னர் பிரமுகர்கள் வந்து 'அனைவரும் மனப்பூர்வமாக விட்டுத் தருகின்றனர்' எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி: 2308, 2540, 2608, 3132, 4319, 2608

ஹவாஸின் கூட்டத்தினர் தோல்வியடைந்த பின் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும், கைதிகளையும் நபிகள் நாயகம் முஸ்லிம் போர் வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டனர். போரில் பிடிக்கப்படுவோர் அடிமைகளாக நடத்தப்படுவது அன்றைய வழக்கம். அந்த அடிமைகளைத் தமது வேலைகளுக்காகவும் வைத்துக் கொள்ளலாம். அல்லது வசதியுள்ளவர்களிடம் விற்றும் விடலாம். இது அன்றைக்கு உலகம் முழுவதும் ஏற்கப்பட்ட நடைமுறையாக இருந்தது.
அந்த அடிப்படையில் போர்க் கைதிகள் முஸ்லிம்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப் பட்ட பின்னர் ஹவாஸின் கூட்டத்தினர் திருந்தி வந்தனர். தங்கள் கைதிகளையும் கேட்டனர்.

எனவே தான் கைதிகளைப் பெற்றவர்கள் மனப்பூர்வமாக விடுதலை செய்யுமாறு மக்களிடம் நபிகள் நாயகம் கேட்கிறார்கள். அவ்வாறு விருப்பமில்லாதவர்கள் விடுதலை செய்து விட்டு அடுத்தடுத்த போர்களில் வெற்றி கிடைக்கும் போது இதற்கு ஈடானதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இரு திட்டங்களை முன் வைத்தார்கள்.

அனைவரும் மனப்பூர்வமாக விட்டுத் தர முன்வந்தனர். கூட்டத்தில் இவ்வாறு கூறுவதால் உண்மையிலேயே மனப்பூர்வமாக கூறுகிறார்களா என்பதை அறிய நபிகள் நாயகம் நினைக்கிறார்கள். திரும்பச் சென்று நன்கு ஆலோசனை செய்யச் சொல்கிறார்கள். மேலும் ஆலோசனை செய்து ஒவ்வொருவரும் நேரில் வந்து முடிவைக் கூறுங்கள் என்று கூறினால் அப்போது நபிகள் நாயகத்திடம் எதிர் கருத்து கூற தயக்கம் காட்டுவார்கள். எனவே தான் முடிவு செய்து பிரமுகர்கள் வழியாக உங்கள் முடிவைக் கூறுங்கள் என்றார்கள்.

இதனால் எந்தத் தனி நபரும் தயக்கம் காட்டும் நிலை ஏற்படாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் கருத்தை அறிய விரும்பி னால் இது போன்று தான் அறிய வேண்டும். அவர்கள் சுதந்திரமாகக் கருத்துக் கூறுவதற்கு ஏற்ப வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

அந்த அளவுக்கு மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் நபிகள் நாயகம் மதித்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் மீது யூதர்கள் சிலர் அவதூறு கூறினார்கள். இதை முஸ்லிம்களில் சிலரும் முன்னின்று மக்களிடம் பரப்பினார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாட்கள் மனம் உடைந்து போனார்கள். பின்னர் இது அவதூறு என்று தெரிய வந்ததும் அவதூறு கூறியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு அவதூறு பரப்பியவர்களில் மிஸ்தஹ் என்பவரும் ஒருவர். இவர் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார். இவருக்கு ஆயிஷா (ரலி)யின் தந்தை அபூபக்ர் (ரலி) பொருளாதார உதவிகள் செய்து வந்தார்.

மிஸ்தஹ் கூறியது அவதூறு என்று நிரூபிக்கப்பட்ட பின் அவருக்கு இனி மேல் உதவுவதில்லை என்று அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து முடிவு செய்தார். அப்போது தான் கீழ்க்கண்ட வசனம் அருளப்பட்டது.

'உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். 'அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 24:12)

இவ்வசனம் அருளப்பட்ட பின் 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்று அபூபக்ர் (ரலி) கூறினார்.
நூல் : புகாரி: 2661, 4141, 4750, 6679

தமது மனைவியின் மீது களங்கம் சுமத்தும் போது தான் மனிதன் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறான். அவ்வாறு பழி சுமத்துவேரை எளிதில் யாரும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் நபிகள் நாயகத்தின் மனைவி மீது களங்கம் சுமத்தியவருக்கு உதவ மாட்டேன் என்று அபூபக்ர் (ரலி) சத்தியம் செய்த போது அது தவறு என்றும் அவருக்கு உதவுவதை நிறுத்த வேண்டாம் என்றும் இறைவனிடமிருந்து தமக்குச் செய்தி வந்ததாகக் கூறி உதவியைத் தொடரச் செய்கிறார்கள்.

பிறருக்கு உதவுவதைச் சடங்கோ, சம்பிரதாயமோ, முன் பகையோ, அவர் நமக்குச் செய்த தீங்கோ தடுக்கக் கூடாது என்பதில் நபிகள் நாயகம் எந்த அளவுக்கு உறுதியான நிலைபாட்டைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்.

துணிவும் வீரமும்

வீரம் நிறைந்த பலருடைய வரலாறுகளை நாம் அறிந்திருக்கிறோம். அவர்களின் வீரத்திற்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீரத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடிருக்கிறது.

அன்பு, இரக்கம், வள்ளல் தன்மை போன்ற பண்புகளைக் கொண்டவர்கள் மென்மையான சுபாவம் உடையோராக இருப்பதால் அவர்களிடம் வீரத்தைக் காண முடியாது. வீரர்கள் என அறியப்பட்டோரிடம் இரக்கத்தையும், மென்மையான சுபாவத்தையும் காண முடியாது. ஆனால் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லவர்களிடமும், பொதுமக்களிடமும் மென்மையாக நடக்கும் வேளையில் களத்தில் எதிரிகளைச் சந்திக்கும் போது, மாவீரராகத் திகழ்ந்தனர் என்பது மற்ற வீரர்களிடம் இல்லாத தனிச்சிறப்பாகும்.

ஆன்மீகத் தலைவர்கள் பொதுவாக போர்களிலும், போராட்டங்களிலும் பங்கேற்பதில்லை. எவ்வளவு தான் அக்கிரமங்கள் கண் முன்னே நடந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் உயர்ந்த நிலை என்று அவர்கள் நினைக்கின்றனர்.
நியாயத்தின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டும் என்ற பக்குவத் தைக் கூட இத்தகைய ஆன்மீகத்தால் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுக் காகவே தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஆன்மீகத் தலைவராக இருந்தும் வீரத்தையும், துணிவையும் வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் வெளிப்படுத்தத் தவறவில்லை. இதையும் ஆன்மீகத்தின் ஒரு அம்சமாகத் தான் அவர்கள் கருதினார்கள்.

அவர்களின் வீரத்தைப் பறைசாற்றும் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். நபிகள் நாயகம் (ஸல்) நஜ்து என்னும் பகுதியை நோக்கி போருக்குப் புறப்பட்டனர். அங்கிருந்து திரும்பும் போது முள் மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் ஓய்வு எடுக்க இறங்கினார்கள். மக்கள் நிழல் தேடி மரங்களை நோக்கிச் சென்று விட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒரு முள் மரத்தின் அடியில் தங்கினார்கள். அதில் தமது வாளைத் தொங்க விட்டனர். நாங்கள் சற்று நேரம் தூங்கினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தனர். அப்போது அவர்கள் முன்னே ஒரு கிராமவாசி நின்று கொண்டிருந்தார். 'நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது இந்தக் கிராமவாசி எனது வாளை எடுத்துக் கொண்டார். நான் திடுக்கிட்டு எழுந்த போது என்னிடமிருந்து உம்மைக் காப்பவன் யார்? என்று கேட்டார். 'அல்லாஹ்' என்று மூன்று தடவை கூறினேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) விவரித்தனர். அந்தக் கிராமவாசியை இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) தண்டிக்கவில்லை

மற்றொரு அறிவிப்பில், 'அல்லாஹ் என்று கூறியவுடன் அவரது கையில் இருந்த வாள் கீழே விழுந்தது' என்று கூறப்பட்டுள்ளது.
நூல் : புகாரி 4139, 2913, 2910

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தயவு தாட்சண்யம் இல்லாத வகையில் உண்மையை உடைத்துச் சொன்னதால் எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களைக் கொல்வதற்கு பல வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் போது கூட அவர்கள் போருக்குச் சென்று விட்டுத் தான் திரும்புகின்றனர். இந்நிலையில் அவர்கள் நடந்து கொண்ட முறையைக் கவனியுங்கள். படை வீரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தனியாக விட்டு விட்டு ஓய்வு எடுக்க மரங்களை நோக்கிச் சென்று விட்டனர். நபிகள் நாயகம் மட்டும் தனியாக ஒரு மரத்தடியில் உறங்கினார்கள்.
ஒரு நாட்டின் தலைவரும், தளபதியுமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியாக விடப்பட்டிருக்கிறார்கள். மேலும் யுத்தத்திருந்து திரும்பும் வழியில் எதிரிகளின் தாக்குதல் அபாயம் நிறைந்திருக்கும்.

இந்நிலையில் அவர்களும் தனியாக மரத்தடியில் தங்குகிறார்கள். அவர்களின் படை வீரர்களும் தனியாகத் தங்களின் தலைவரை விட்டுச் செல்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அளவிட முடியாத துணிவு இதிலிருந்து வெளிப்படுகிறது. தனியாக ஓய்வெடுக்கும் போது கூட மரத்தின் மீது தமது வாளைத் தொங்க விட்டு விட்டு அயர்ந்து தூங்குவதென்றால் இதற்கு அசாத்தியமான துணிச்சல் இருக்க வேண்டும். அவர்களது வாளையே எடுத்துக் கொண்டு ஒருவர் கொல்ல முயற்சிக்கும் போது கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூப்பாடு போடவில்லை; தமது சகாக்களை உதவிக்கு அழைக்கவில்லை. மாறாக தன்னந்தனியாக எதிரியை மடக்கிப் பிடித்துக் கொண்டு அதன் பிறகு தான் மற்றவர்களை அழைத்தனர். நான் உன்னைக் கொல்லப் போகிறேன் என்று வாள் முனையில் மிரட்டப்பட்ட போதும் கொஞ்சமும் தளராமல் 'என்னை அல்லாஹ் காப்பாற்றுவான்' என்று கூறியதும் அவர்களின் மாவீரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கூட தமது படையினரைத் துணைக்கு அழைக்க அவர்கள் நினைக்கவில்லை என்றால் இது மாவீரர்களால் கூட சாத்தியமாகாதது. இறுதியில் தம்மைக் கொல்ல முயன்றவரைத் தண்டிக்காது மன்னித்து அனுப்பியது அவர்களின் பெருந்தன்மைக்கும், பொறுமைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும், எதற்கும் அஞ்சக் கூடாது என்று அவர்கள் போதனை செய்து வந்ததற்கு அவர்களே முன்னுதாரணமாக நடந்து காட்டியதால் தான் மாமனிதர் என்று போற்றப்படுகின்றனர்.

அவர்களின் மாவீரத்துக்கும், அளவற்ற துணிச்சலுக்கும் உதாரணமாக மற்றொரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் ஊழியராக இருந்த அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் அழகு படைத்தவர்களாகவும், மிகப்பெரும் வீரராகவும் திகழ்ந்தனர். ஒரு நாள் மதீனாவாசிகள் திடுக்கிட்டனர். உடனே வீட்டை விட்டு வெளியேறி (திடுக்கத்தை ஏற்படுத்திய) சப்தம் வந்த திசை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டு, அபூதல்ஹா (ரலி)யின் சேனம் பூட்டப்படாத குதிரையில் எதிரில் வந்தனர். அஞ்சாதீர்கள்! அஞ்சாதீர்கள்! என்று கூறிக் கொண்டே வந்தனர். '(வேகத்தில்) இக்குதிரை கடலாக இருக்கிறது' எனவும் குறிப்பிட்டனர்.
நூல் : புகாரி 2908, 2627, 2820, 2857, 2862, 2867, 2968, 2969, 3040, 6033, 6212

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகரில் ஆட்சியை நிறுவிய பின் நடந்த நிகழ்ச்சியாகும்.

எல்லாவிதமான தீமைகளையும், தீயவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தயவு தாட்சண்யமின்றி எதிர்த்ததால், அவர்கள் அதிக அளவில் எதிரிகளைச் சம்பாதித்திருந்தனர். பலமுறை மதீனா நகரை நோக்கி எதிரிகள் படை திரட்டி வந்தனர். இந்த நிலையில் தான் ஒரு நாள் எதிரிப் படையினர் தாக்க வருவது போன்ற சப்தம் மதீனா நகர் முழுவதும் கேட்டது. எதிரிகள் தாக்கி விடக் கூடாது என்பதற்காக மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, சப்தம் வந்த திசையை நோக்கி விரைந்தனர்.

இந்தச் சப்தத்தைக் கேட்டவுடன் யாரும் தன்னந்தனியாக அந்தத் திசை நோக்கிச் செல்ல மாட்டார்கள். எனவே பலருக்கும் தகவல் சொல் போதுமான ஆட்களைத் திரட்டிக் கொண்டு நபித் தோழர்கள் சப்தம் வந்த திசையை நோக்கித் திரண்டார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, தோழர்களுக்கும் முன்னரே சப்தம் வந்த திசை நோக்கிச் சென்று கண்காணித்து விட்டு, பயப்படும்படி ஏதுமில்லை என்று அறிந்து கொண்டு மின்னல் வேகத்தில் திரும்பி வந்து மக்களுக்குத் தகவல் சொல்கிறார்கள்.

வேகமாக குதிரையில் பயணம் செய்வதென்றால், அதில் சேனம் பூட்டி வசதியாக அமர்ந்து கொண்டால் தான் சாத்தியமாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ சப்தம் கேட்டவுடன் சேனத்தைப் பூட்டுவதால் ஏற்படும் சிறு தாமதத்தையும் தவிர்க்க, சேனம் பூட்டாத குதிரையில் விரைகிறார்கள்.

சேனம் பூட்டாத குதிரையின் மேல் வேகமாக சவாரி செய்வதற்கு அதிகமான துணிச்சலும், உடல் வலுவும் அவசியம்.
ஒரு வேளை எதிரிகள் வந்தால் தன்னந்தனியாகவே அவர்களை எதிர் கொள்வது என்ற தைரியத்துடன் தான் வாளையும் எடுத்துக் கொண்டு சென்றனர்.

அபூ தல்ஹாவின் வீடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிர் வீடாக இருந்தது. அவர் வசதி மிக்கவராகவும் இருந்தார். எனவே தான் அவரிடம் உடனடியாகக் குதிரையை இரவல் வாங்கிக் கொண்டு துணைக்கு அபூ தல்ஹாவைக் கூட அழைத்துக் கொள்ளாமல் புறப்பட்டனர்.

நள்ளிரவில், தன்னந்தனியாக, எதிரிகள் படை திரண்டு வருகிறார்களா? என்பதை அறிவதற்கு எவ்வளவு பெரிய வீரரும் தனியாகப் போக மாட்டார். அதுவும் மாபெரும் தலைவராக இருப்பவர்கள் இது போன்ற ஆபத்தான பணியில் நேரடியாக இறங்க மாட்டார்கள். இறங்கத் தேவையுமில்லை. யாரையாவது அனுப்பி தகவல் திரட்டி வருமாறு கூறினாலே போதுமானது.

ஆயினும் தலைமை ஏற்பவர் சமுதாயத்தைக் காக்கும் பொறுப்பையும் சுமக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு மற்றவர்களின் தூக்கத்தைக் கலைக்காமல் தாமே நேரடியாகக் களத்தில் இறங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கூறப்படும் ஒவ்வொரு சொல்லும் மாமனிதரின் மாவீரத்தைப் பறை சாற்றுகின்றன.

* எதிரிகள் படை திரட்டி வருகிறார்களோ என்ற அச்சம்
* தன்னந்தனியாகப் புறப்பட்டது
* ஆயுதம் தரித்துப் புறப்பட்டது
* சேனத்தைக் கூட பூட்டாமல், விரைவாக வெறும் குதிரையில் புறப்பட்டது
* மின்னல் வேகத்தில் சென்று மிக விரைவாகத் திரும்பியது

இவையாவும் எந்த வீரரிடமும் காண முடியாதது. எந்த ஆன்மீகத் தலைவரிடமும் எந்தத் தளபதியிடமும், எந்த மன்னரிடமும் காண முடியாததாகும்.

உயிரே போய் விடக் கூடும் என்ற இடத்துக்கு தனியாகப் புறப்பட்டுச் சென்ற இந்த வீரத்துக்கு நிகரான வீரத்தை வரலாற்றில் காணவே முடியாது.

இந்த நிகழ்ச்சி நடக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 53 வயதைக் கடந்திருந்தார்கள். அனைவரும் தளர்ந்து விடக் கூடிய வயதில் சேனம் பூட்டாத குதிரையில் மின்னல் வேகத்தில் ஏறிச் செல்ல உடல் நல்ல வலுவுடன் இருக்க வேண்டும்.தொடரும் இன்ஷா அல்லாஹ்...

2 comments:

nidurali said...

அருமையான விளக்கத்துடன் சிறப்பாக அமைந்த கட்டுரையை தந்தமைக்கு வாழ்த்துகள்

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி சகோ.இந்த தளத்தில் உறுபினராகுங்கள்,இந்த தளத்தின் அப்டேட் நியூஸ் உங்களுக்கு கிடைக்க வேண்டும் அல்லவா .. தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.........

Post a Comment